உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறான சிகிச்சையால் பாதிப்பு; வாலிபருக்கு அரசு பணி தர உத்தரவு

தவறான சிகிச்சையால் பாதிப்பு; வாலிபருக்கு அரசு பணி தர உத்தரவு

சென்னை : சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சசிகலா; இவரது 15 வயது மகன் விஷ்ணுவுக்கு வயிறு வலி ஏற்பட்டதால், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அறுவை சிகிச்சை நடந்த பின், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். வலி நீடித்தும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வலி தொடர்ந்ததால், தனியார் மருத்துவமனையில் 'ஸ்கேன்' எடுத்த பின், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியதை தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 15 நாட்கள் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, தவறான சிகிச்சையால் மகன் பாதிக்கப்பட்டதால், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், மேட்டூர் அரசு மருத்துவமனை டாக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில்,சசிகலா வழக்கு தொடர்ந்தார்.மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு, புகைப்படங்களையும், சசிகலா தாக்கல் செய்தார். சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மகனுக்கு அரசு பணி வழங்கவும் கோரியிருந்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்தஉத்தரவு:அரசு மருத்துவமனைகளில் இந்த சிறுவனுக்கு அதிகபட்ச கவனம் காட்டியதாக தெரியவில்லை. போதிய கவனம் செலுத்தி குறித்த நேரத்தில் செயல்பட்டிருந்தால், பிரச்னைகளை தவிர்த்திருக்கலாம். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியும், தொடர்ந்து உடல் நலிவுற்று இருந்துள்ளார். சிறுவனுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு, அரசு தான் பொறுப்பு. ஆறு வாரங்களில், 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை சிறுவனுக்கு வழங்க வேண்டும்.சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு, தற்போது 22 வயதாகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். கல்வி தகுதி, வேலைவாய்ப்பு பதிவு விபரங்கள் உடன், தகுதியான வேலை கோரும் விண்ணப்பத்தை, சேலம் கலெக்டரிடம் வழங்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலித்து, தகுதியான பணிக்கு அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்று மாதங்களில் இதை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்