பழகுனர் பயிற்சி முடித்தோர் ஆர்ப்பாட்டம் ரயில்வே தலைமையகத்தில் தள்ளுமுள்ளு
சென்னை:தெற்கு ரயில்வே மற்றும் பெரம்பூர் ஐ..சி.எப்., தொழிற்சாலையில், 2008 முதல் 2023 வரை, 17,000 பேர் தொழில் பழகுனர் பயிற்சி முடித்துள்ளனர். இவர்கள், தங்களுக்கு ரயில்வேயில் வேலை கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்களை பணிக்கு பரிந்துரைக்க கோரி, சென்னை சென்ட்ரல் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன், 150க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், அதிகாரிகளை சந்திக்கச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்காமல், தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய ரயில்வே உட்பட பல்வேறு மண்டலங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நாங்கள் டில்லி சென்று எங்களது கோரிக்கையை முன்வைத்த போது, பயிற்சி முடித்தோருக்கு பணி வழங்கக்கோரி, தெற்கு ரயில்வேயில் இருந்து எந்த பரிந்துரை கடிதமும் வரவில்லை என்றனர்.இது தொடர்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் அலுவலக அதிகாரிகளை சந்திக்க, நேற்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி காத்திருந்தோம். ஆனால், எங்களை சந்திக்க அனுமதிக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.