உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருங்கூர் அகழாய்வில் சங்ககால பானை ஓடுகள் கண்டெடுப்பு

மருங்கூர் அகழாய்வில் சங்ககால பானை ஓடுகள் கண்டெடுப்பு

சென்னை:கடலுார் மாவட்டம், மருங்கூரில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத்தப்படுகிறது. இங்கு ஏற்கனவே ராஜராஜன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி ஆகியவை கிடைத்தன. இந்நிலையில் நேற்று 122 செ.மீ., ஆழத்தில், இரண்டு ரவுலட்டட் வகைப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அரிக்கமேடு, வசவசமுத்திரம், பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கீழடி ஆகிய இடங்களிலும் ஆந்திரா, ஒரிசா மாநிலக் கடற்கரை ஓரங்களில் உள்ள தொல்லியல் தளங்களிலும் இதே வகையான பானை ஓடுகள் கிடைக்கின்றன. பொதுவாக இந்த ரவுலட்டட் வகை பானை ஓடு, ரோம நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்தன. சமீப காலத்தில் தான், தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்ட மட்கலன்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை சங்க காலம் எனும் துவக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவை. இதிலிருந்து மருங்கூர் பகுதி துவக்க வரலாற்றுக்காலத்தைச் சார்ந்த தொல்லியல் தளம் என்பது உறுதி செய்யப்படுகிறது. இது குறித்த தகவலையும் படங்களையும் தொல்லியல் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, நேற்று தன் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பருவ மழையால் தமிழகத்தில் அகழாய்வு பணிகள் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், இந்த ரவுலட்டட் பானை ஓடுகள் எப்போது கண்டெடுக்கப்பட்டவை என்ற தகவல் வெளியிட படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை