உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வை விமர்சிப்பதே தி.மு.க.,வுக்கு வேலை: அண்ணாமலை குற்றச்சாட்டு

பா.ஜ.,வை விமர்சிப்பதே தி.மு.க.,வுக்கு வேலை: அண்ணாமலை குற்றச்சாட்டு

ராமநாதபுரம்; ''மேடை போட்டு பா.ஜ.,வை விமர்சனம் செய்வதே தி.மு.க., விற்கு வேலையாகிவிட்டது. மக்கள் பிரச்னைகளை பற்றி பேச அவர்களுக்கு நேரமில்லை'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.ராமநாதபுரத்தில் அண்ணாமலை கூறியதாவது:தி.மு.க., விற்கு மேடை போட்டு பா.ஜ.,வை விமர்சனம் செய்வதே வேலையாகிவிட்டது. மக்கள் பிரச்னைகளை பற்றிப்பேச அவர்களுக்கு நேரமில்லை. விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறு வரையறைசெய்வதில் தமிழகத்திற்கு லோக்சபா தொகுதிகள் குறையும் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.அது போன்று தொகுதிகள் குறையாது என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உறுதியளித்துவிட்டனர். பிரச்னையே எழாத போது அதனை பேசுவதற்கு எதற்கு அனைத்துக்கட்சி கூட்டம். அங்கு போய் எதை பேசுவது என்பதால் தான் புறக்கணித்துள்ளோம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் முதல் ஆளாக பா.ஜ., பங்கேற்கும். அமைச்சர் செந்தில் பாலாஜி போல நான் ஜெயிலுக்கு போகவில்லையே. செருப்பு இல்லாமல் தான் நடக்கப் போகிறேன். அதில் தப்பு ஏதும் இல்லையே. நான் மும்மொழி பள்ளியில் தாய் மொழியான தமிழில் தான் படித்தேன். ஜெயகுமார் படிக்காதவர். அவருக்கு என்ன தெரியும்.இலங்கையில் புதிய அரசு பதவியேற்றதால் மீனவர்கள் கைது அதிகரித்துள்ளது. மீனவர்கள் என்ற போர்வையில் சிலர் கடத்தல் தொழில் செய்கின்றனர். அவர்களை நமது கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் பிரச்னை குறித்து ராமநாதபுரம், மற்ற பகுதி மீனவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுவோம்.

விரைவில் கூட்டு கூட்டம்

இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதத்திற்கு, இலங்கை வைஸ் அட்மிரல் ஜெனரல் பதில் அளித்துள்ளார்.அதில் வேண்டுமென்று நடக்கவில்லை. தற்செயலாக விபத்தாக நடந்துவிட்டது. அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் பா.ஜ., அரசு அதனை தீர்க்கவே முயற்சிக்கிறது. 2020ல் ஜாயின்ட் ஒர்க் கமிட்டி பேச்சு வார்த்தை இலங்கையில் நடந்தது. அதுபோல இரு நாட்டு அமைச்சர்கள், மீனவர்கள், அதிகாரிகள் இணைந்து கூட்டு கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு மீனவர்கள் கைது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !