கடலுார் : நான் இருக்கும் வரையும், தி.மு.க., இருக்கும் வரையும் இந்த மண்ணுக்குள் ஹிந்தி வர முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கடலுாரில் நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
தி.மு.க., அரசு தனி மனித தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது. மேடைகளில் அறிவிப்பதோடு இல்லாமல், மக்களின் இதயங்களில் கொண்டுபோய் சேர்க்கும் அரசு. மக்களுக்கான நன்மை, அவர்களின் மகிழ்ச்சி தான் ஒரே இலக்கு. லட்சியவாதிக்கு கொள்கைகள் மட்டும் தான் தெரியவேண்டும். அவதுாறுகள், வீண் பேச்சுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை. அதனால் தான் ஏராளமான திட்டங்களை தீட்ட முடிந்தது. மக்களின் மகிழ்ச்சி விடியலின் அடையாளம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் திராவிட அரசு செய்து வருகிறது. அதனால் தான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். தேர்தலில் அறிவிக்காத திட்டங்கள், வாக்குறுதிகளை தி,மு.க., அரசு செய்கிறது. அந்த வகையில், 1.16 லட்சம் கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். இது எல்லோருக்கமான ஆட்சி. நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவில் முன்மாதிரியான அரசு நம்முடைய திராவிட மாடல் அரசு. ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்தால் மத்திய அரசும் வளரும். ஆனால், மத்திய அரசு, மாநில வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறது. மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதி மற்றும் திட்டங்களை மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர்கள் படித்து முன்னேறுவதை தடுக்க பார்க்கின்றனர். படிக்கக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என நுாறு ஆண்டுகளுக்கு முன் நம் மக்கள் ஒடுக்கப்பட்டனர். படிக்கவும், வேலைகளை பெற அடித்தளமாக உள்ள சமூக நீதியை சிதைக்க தான் தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்படுகிறது.இதன் மூலம் நம் முன்னேற்றம் தடுக்கப்படும். மீண்டும் கல்விச் சாலைக்குள் வரவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். தடைகளை உருவாக்கி தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கின்றனர். பட்டியலினம், பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் தடுக்கப்படும். தமிழக மக்களின் வளர்ச்சி, மாநில வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர். ஆண்டுதோறும் வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு, மத்திய கல்வித்தறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா, நாங்களா. கொடுத்துப் பெறுவது தான் கூட்டாட்சி தத்துவம். மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்பது அரசியல் இல்லையா? ஹிந்தியை திணிப்பது, ஒரு மொழி நாடாக மாற்றுவது, ஒற்றை இன நாடாக மாற்ற முயற்சிப்பது நிபந்தனை அரசியல் இல்லையா? சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் செய்வது அரசியலா, நாங்கள் செய்வது அரசியலா.தமிழகத்தில் இருந்து எங்களிடம் வாங்கும் வரியை தர முடியாது என கூற ஒரு நொடி போதும். தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டுள்ளது. மதவெறி, ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு தான் செய்கின்றனர். தாய் மொழியை வளர்ப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். நீங்கள் வந்து தான் வளர்ப்பீர்கள் என தமிழ் கையேந்தி நிற்கவில்லை. தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். தமிழர்களின் தனித்துவ குணத்தை பார்க்க வேண்டாம். நான் இருக்கும் வரை, தி.மு.க., இருக்கும் வரை இந்த மண்ணுக்குள் ஹிந்தி வர முடியாது. இதுபோன்ற தடைகள் எங்களுக்கு புதியதல்ல. எந்த பக்கம் தடை வந்தாலும் அதை உடைப்போம். மக்கள் ஆதரவுடன் வெற்றி தொடரும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.