உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டில் உள்ள 2,622 ஐம்பொன் சிலைகளை மீட்க தயக்கம் முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் உள்ள 2,622 ஐம்பொன் சிலைகளை மீட்க தயக்கம் முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு

திருத்தணி:''நம் நாட்டின் பாரம்பரிய சொத்தான 2,622 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன; அவற்றின் மதிப்பு 1,022 கோடி ரூபாய். அந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டு வர தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது,'' என, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

போலீசில் புகார்

பொன் மாணிக்கவேல் நேற்று, 'ஆலயம் காப்போம்' என்ற அமைப்பின் நிர்வாகிகளுடன் சேர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மதியரசனிடம் புகார் அளித்தார்.அந்த புகார் மனுவில், 'அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, உறுப்பினர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்காக, திருத்தணி முருகன் கோவில் பணம் கையாடல் செய்யப்பட்டு உள்ளது. அந்தப் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கடந்த 2017 செப்டம்பர் 18ல், சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்காக, திருத்தணி முருகன் கோவில் பணத்திலிருந்து 6.13 லட்சம் ரூபாயை எடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் முறைகேடாக செலவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களிலும், 12 சதவீதம் வரி வசூலித்து, ஆண்டுக்கு 427.89 கோடி ரூபாயை தமிழக அரசு எடுத்துக் கொள்கிறது. இந்த நிதியில் இருந்து, மானிய கோரிக்கையின் போது காலை சிற்றுண்டிக்கு பணம் எடுக்காமல், திருத்தணி முருகன் கோவில் பணத்தை எடுத்து செலவு செய்தது அதர்மம். கோவில் சொத்துக்கள் மற்றும் பணத்தை, கோவில் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்காக மட்டுமே செலவிட வேண்டும் என்பது விதி. இதை கண்காணிப்பதற்காகவே, ஹிந்து அறநிலையத் துறையில் கமிஷனர், இணை ஆணையர்கள் உள்ளனர். அவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளமும் வழங்கப்படுகின்றன. அறநிலையத் துறையில் எது செய்தாலும், கேள்வி கேட்க யாருமில்லை என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். அது தவறு என விழிப்புணர்வு ஏற்படுத்தவே, திருத்தணி முருகன் கோவில் பணம் கையாடல் குறித்து, போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.திருத்தணி முருகன் கோவிலில், தங்க கோபுரம் அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதை நானே கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால், சம்பளம் வாங்கும் அதிகாரிகள், எந்த வழக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், அதிகாரிகளே குற்றவாளிகளாக உள்ளதே.

ரூ.1,022 கோடி

நம் நாட்டின் பாரம்பரிய சொத்தான 2,622 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன; அவற்றின் மதிப்பு 1,022 கோடி ரூபாய். இந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டு வர தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. சிலை கடத்தலில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூருக்கு சொந்தமான எட்டு இடங்களில் சோதனை நடத்திய போது, 2,622 சிலைகள் நம் நாட்டிலிருந்து கடத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில், 40 சிலைகளை சுபாஷ் சந்திரகபூரின் சகோதரி சுஷ்மா செரீன் மறைத்து வைத்துள்ளார். இந்த சிலைகளை எல்லாம் கண்டுபிடித்து மீட்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமல் காதை மூடிக் கொண்டு உள்ளனர்.திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் அருகே உள்ள காளியம்மன் கோவிலில், 2010ல் அம்மனின் சூலம் திருடு போனது, தற்போது தான் எனக்கு தெரிய வந்தது. மேற்கண்ட கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி போலீசில் புகார் கொடுப்பேன். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ