குப்பை கையாளும் பணியை தனியார் வசமாக்க அரசு உத்தரவு
சென்னை: மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை பார்க்கும் துாய்மை பணியாளர்களை, வேறு பணிகளுக்கு மாற்றி, குப்பை கையாளும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் குப்பை கையாளும் பணியை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொண்டு வருகின்றன. துாய்மை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். இவர்கள், துாய்மை பணியை முறையாக மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால், சென்னை உட்பட பல மாநகராட்சிகளில் குப்பை கையாளும் பணி, மண்டலம் வாரியாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், ஏற்கனவே 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.சென்னையில் தற்போது, நிரந்தர பணியாளர்களாக உள்ள, 1,500 பேர் உட்பட, மாநிலம் முழுதும் உள்ள 5,000 பேர் ஓய்வுபெறும் வரை, அரசு பள்ளிகள், வளாகங்கள், பூங்காக்களில் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல், மாநிலம் முழுதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டாம் என அரசு உத்தரவிட்டு உள்ளது.