சென்னை:''நம் தேசம் வளர அறிவுசார் சொத்துக்கள் மிக அவசியம் என்பதால், அதில் மாநில பல்கலைகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்,'' என, கவர்னர் ரவி பேசினார்.தேசிய தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்ற தமிழக கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. பெரும் வளர்ச்சி
தரவரிசையில் முன்னிலை பெற்ற 11 உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, கவர்னர் ரவி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.கவர்னர் ரவி பேசியதாவது:நாம் அனைவரும் முதலிடத்தை நோக்கி செல்லும் இந்த பயிற்சியை நிறுத்தக்கூடாது. தமிழகத்தில் படிப்படியாக கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. தமிழக பல்கலைகள் சிறப்பாக முன்னேறி உள்ளன. அண்ணா பல்கலை நல்ல வளர்ச்சி பெற்று, இன்று மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.மாநிலத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் என அனைத்தும், மற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஊக்கம் அளிக்கும். இன்று, வேளாண்மை, பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஏற்கனவே பட்டியலில் சிறந்த இடங்களை பிடித்த கல்லுாரிகளும், அதே இடத்தை தக்க வைத்துள்ளன. நாட்டில் முதல் வரிசையில் சென்னை ஐ.ஐ.டி., இருப்பது, கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் சேர்க்கிறது. ஆய்வு மாணவர்கள், பல்கலை மானியக் குழுவின் ஆராய்ச்சி உதவித் தொகையை பெற, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு, பல்கலைகள் வழிகாட்ட வேண்டும். ஒவ்வொரு பல்கலையும் தனித்துவமான தன்மையுடன் விளங்குகிறது, இந்த நிலை வரும் நாட்களிலும் தொடர வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பிஎச்.டி., ஆய்வுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அறிவுசார் சொத்துக்கள்
நம் மாநிலத்தில் பிஎச்.டி., ஆய்வு பட்டம் பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் அதே வேளையில், ஆய்வின் தரம் மிகவும் குறைந்து வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது; அதில் முன்னேற வேண்டும்.தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைகள், அறிவுசார் சொத்துக்களை பெறுவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நம் தேசம் வளர அறிவுசார் சொத்துக்கள் அவசியம்.தற்போது, உலக அறிவுசார் சொத்துக்களில், 46 சதவீதம் சீனாவிடமும், 13 சதவீதம் அமெரிக்காவிடமும் உள்ளன. 2.5 சதவீதம் மட்டுமே நம்மிடம் உள்ளது; அதிகரிக்க நாம் பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, பல்கலை துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.