உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறு ஏல கோப்பை திருப்பி அனுப்பிய கவர்னர்: புதுச்சேரி சாராய, கள்ளுக்கடைகளுக்கு சிக்கல்

மறு ஏல கோப்பை திருப்பி அனுப்பிய கவர்னர்: புதுச்சேரி சாராய, கள்ளுக்கடைகளுக்கு சிக்கல்

புதுச்சேரி : புதுச்சேரியில் சாராயம் மற்றும் கள்ளுக்கடை கோப்பினை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளதால் மறு ஏலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மதுக்கடைகளுக்கு பெயர் பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகள் உள்ளன.இந்த கடைகள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை ஏலம் விடுவது வழக்கம். அதன்படி முதலாம் ஆண்டு எடுக்கப்படும் சாராய மற்றும் கள்ளுக்கடைகள் 2ம் ஆண்டு கூடுதலாக 5 சதவீதமும், அதற்கு அடுத்த ஆண்டில் மேலும் 5 சதவீதம் கூடுதல் கிஸ்தி தொகையை செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். கிஸ்தி தொகை செலுத்தாவிட்டால் மறு ஏலம் விடப்படும்.அதன்படி ஜூலை மாதத்தில் மறு ஏலத்திற்கு அனுமதி கேட்டு கலால் துறை மூலம் கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்த கோப்பிற்கு கவர்னர் அனுமதி தராமல் திருப்பி அனுப்பியுள்ளார்.இதனால் புதுச்சேரியில் ஜூலை 1ம் தேதி முதல் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளுக்கு மறு ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தில் மாகி, ஏனாமில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் இல்லை. எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மட்டும் இந்த மதுக்கடைகள் தேவையா என கேள்வி எழுப்பி கோப்பை கவர்னர் ராதாகிருஷ்ணன் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் புதுச்சேரியில் 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகளுக்கு மறு ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம் கலால் வருவாயை பெரிதும் சார்ந்துள்ளது. கலால் துறை மூலம் 1480 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றது. இதில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.100 கோடி கிடைத்து வருவதுகுறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ