உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து மாநிலங்களிடம் பசுமை தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு

மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து மாநிலங்களிடம் பசுமை தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு

சென்னை:மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்து குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழலில் மருந்து, நச்சுத்தன்மையின் தாக்கம் என்ற தலைப்பில், 'கரன்ட் சயின்ஸ்' ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: வளர்ச்சி அதிகரிக்கும் போது, ரசாயன கழிவுகளும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைகின்றன. 43 சதவீத ஆறுகள், மருந்து கழிவுகளால் ஆபத்தை எதிர்கொள்கின்றன.தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளும் மனிதர்கள், விலங்குகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்படி மாற்றங்கள் நிகழும் உயிரினங்கள் வெளியேற்றும் சிறுநீர், மலம் ஆகியவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை விதிகளின்படி அகற்றுவதில்லை. மருத்துவ கழிவுநீரை சுத்திகரிக்காமல், பொது கழிவுநீர் கால்வாயில் விடுகின்றனர். இவை மண் வளத்தையும், நிலத்தடி நீர் வளத்தையும் அபாயமாக மாற்றுகின்றன.ஹைட்ரஜன் குளோரைடு, பென்சீன் மற்றும் டோலுயீன், கல்நார், காட்மியம், பாதரசம், குரோமியம், கீமோதெரபி கழிவுகள் பெரும் ஆபத்தானவை, இதனால், மனித ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நீதிபதி சுதிர் அகர்வால், நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதை, இந்த ஆய்வு கட்டுரை எடுத்து காட்டுகிறது. மருந்துகள் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், அதன் பாதிப்புகளை குறைக்க, ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.நோய் எதிர்ப்பு சக்திக்கான, 'ஆன்டிபயாடிக்' மருந்து பயன்பாட்டை ஆராய்வது; மருந்து கழிவுகள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது; மருந்து கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல்; போதை பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த விதிகளை கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக மருந்து கழிவுகள் அபாயத்தை குறைக்க முடியும்.மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை