உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை:வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில், 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக வடக்கு கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. தென்மாவட்டங்களின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழையும்; பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்யும். மேலும், சில இடங்களில், இடி, மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வேகம் வரை பலத்த காற்று வீசும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, சேலத்தில், 9 செ.மீ., மழை பெய்தது. அதிராம்பட்டினம், 7; தேவாலா, 6; நம்பியூர், 5; ஏற்காடு, 4; வேளாங்கண்ணி, சங்கராபுரம், நீடாமங்கலம், 3; ஈரோடு, பெரியகுளம், பெருந்துறை, 2; ஓமலுார், கூடலுார், கோடநாடு, வால்பாறை, மணமேல்குடி, குன்னுார், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, மாநில அளவில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தி மற்றும் திருத்தணியில், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மற்ற இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாக வெப்பநிலை பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் திடீர் மழை

சென்னையை பொறுத்தவரை, கடந்த சில வாரங்களாக, கடும் வெயில் வாட்டியது. நேற்று முன்தினம் மட்டும், அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியசுக்கு சற்று குறைந்தது.இந்நிலையில், நேற்று மாலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், இடி, மின்னலுடன் திடீர் மழை பெய்தது. அதனால், பகல் நேர வெப்பநிலை மாலையில் சற்று தணிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்