உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்குபதிவு செய்து காத்திருப்போர் எத்தனை பேர் விபரம் கோரும் உயர் நீதிமன்றம்

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்குபதிவு செய்து காத்திருப்போர் எத்தனை பேர் விபரம் கோரும் உயர் நீதிமன்றம்

மதுரை:கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிவு செய்து எத்தனை பேர் காத்திருக்கின்றனர் என்ற விபரங்களை, மதுரை அரசு மருத்துவமனை டீன் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை கே.கே.நகர் வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு:கல்லீரல் பாதிக்கப்பட்டோருக்கு விபத்துக்களில் மூளைச்சாவு ஏற்பட்டு இறப்போரிடமிருந்து தானமாக கல்லீரல் பெற்று பொருத்தினால் மட்டுமே காப்பாற்ற வாய்ப்புள்ளது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திடம் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். இதுவரை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளவில்லை. சென்னை ஸ்டான்லி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மது அருந்துவோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் கல்லீரல் பாதித்தோரின் சிகிச்சைக்கு நிதி ஒதுக்குவது குறைவு. ஏழை நோயாளிகளுக்கு கடைசி நம்பிக்கை அரசு மருத்துவமனைகளே. மதுரை அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிவு செய்து எத்தனைபேர் காத்திருக்கின்றனர் விபரங்களை மதுரை அரசு மருத்துவமனை டீன் செப்.,11 ல் அறிக்கையாக தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ