சென்னை:பள்ளி, கல்லுாரிகளில், கல்வி குறித்த திரைப்படங்களை திரையிட அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி திரைப்பட அமைப்பாளர் சங்கம் தாக்கல் செய்த மனுவில் 'பள்ளி, கல்லுாரிகளில், கல்வி சம்பந்தப்பட்ட திரைப்படங்களை திரையிடுவதற்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.முத்தப்பன் ஆஜராகி, “பள்ளிகளில் கல்வி குறித்த திரைப்படங்களை திரையிட, கடந்த ஆண்டு வரை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கல்வியாண்டுக்கு, இதுவரை அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை,” என்றார்.அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் டி.வெங்கடேஷ்குமார், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் பி.ராஜராஜேஸ்வரி ஆஜராகி, “வரும் கல்வியாண்டில், அதாவது 2024 - 25ம் ஆண்டுக்கு, அரசு இதுகுறித்து பரிசீலிக்கும்,” என்றனர்.இதையடுத்து, மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, அரசுக்கும், கல்வித்துறைக்கும், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.