உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றுவிட்டால் மக்களாட்சி முறை இருக்காது:வைகோ பேச்சு

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றுவிட்டால் மக்களாட்சி முறை இருக்காது:வைகோ பேச்சு

அரியலூர்:இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றுவிட்டால் மக்களாட்சி முறை இனியும் இருக்காது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.சிதம்பரம் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: சுதந்திர இந்திய வரலாற்றில் இது முக்கிய தேர்தலாகும். பாசிசத்துக்கும், குடியரசுக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும்.தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு வடநாட்டு பெயர்களை சூட்டுக்கின்ற நிலையில், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி அழகு பார்த்தவர் மாவீரர் திருமாவளவன்.திராவிட இயக்கத்தை அழிப்பதே எனது வேலை என பிரதமர் மோடி தனது பதவின் மதிப்பறியாது பேசுகிறார். 100 ஆண்டுகள் கடந்த ஒரு இயக்கத்தை இவர் அழிக்க நினைக்கிறார். என்ன ஆணவம் இருந்தால் இவ்வாறு பேசலாம். தமிழகம் திராவிட இயக்க பூமி. பெரியார்,அண்ணா, கருணாநிதி போன்றோர் வாழ்ந்த இயக்கம் இது. மோடி தலைமையில் நாடு சர்வாதிகர ஆட்சியை நோக்கி போகிறது.இந்த தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றுவிட்டால், மக்களாட்சி முறையை ஒழித்து விட்டு ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்து, தான் ஜனதிபதி ஆகலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இருக்கிறார் மோடி. திராவிடம் இருக்கும் வரை அது நடக்காது.நான் திமுகவில் இருந்து வெளியேறி இருந்தாலும், மீண்டும் குடும்பத்தில் இணைத்துள்ளேன். இன்று இந்தியாவுக்கே வழிகாட்டும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.இந்தியா கூட்டணியை நிர்வகிக்கும் திறமை ஸ்டாலினுக்கு உண்டு. பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது சோர்வாக செல்வதை கண்ட ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதைத் தாண்டி, கனடா போன்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. உலகிற்கே வழிகாட்டும் தகுதியை ஸ்டாலின் பெற்றுள்ளார் என்பதை எண்ணி மகிழ்கிறேன்.மகளிருக்கு இலவச பேருந்து, மாதம் ரூ.1,000 என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். விவசாயிகளுக்கு 2.50 லட்சம் மின் இணைப்புகளை கொடுத்துள்ளார் ஸ்டாலின்.தமிழகத்தை பற்றி மோடி, நட்டாவுக்கு என்ன தெரியும். இங்கே அடிக்கடி வந்து பேசிவிட்டு செல்கின்றனர். ஹிந்தியில் திருக்குறளை எழுத்திக்கொண்டு மோடி வாசிக்கிறார். நிதிநிலை அறிக்கை வாசிக்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் திமிராக செல்கிறார்.பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களின் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார்.5 மாடி ஹோட்டல் போல இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை சாவர்க்கர் பிறந்த நாளில் திறந்து வைத்தார் மோடி. அங்கு கோட்சேயின் கூட்டம் பகிரங்கமாக உலவுகின்றன. இன்று நமது மொழிக்கு மோடியின் வடிவில் ஆபத்து வந்துள்ளது.இப்படியே மோடியின் ஆட்சி நீடிக்குமேயானால் இந்தியா ஒன்றாக இருக்காது. துண்டு துண்டாகி விடும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமஸ்கிருதம், ஹிந்தியை மட்டுமே படிக்க வேண்டும் என மோடி உத்தரவிடுவார்.எனவே தமிழுக்காக உயிர்நீத்த கீழப்பழுவூர் சின்னசாமி வாழ்ந்த தமிழகத்தில் ஹிந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது. இந்த மண்ணில் தான் மாணவி அனிதா நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறமுடியாமல் உயிர்நீத்தார். அவ்வாறு பல போராட்டங்களை சந்தித்துள்ள இந்த மண்ணில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என்றார்.பிரசார கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா,க.சொ.க.கண்ணன்,திமுக நகரச் செயலர் முருகேசன்,மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டத் தலைவர் அங்கனூர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ரெங்கநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ