சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அரசு ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. எனவே, முறைகேட்டை தடுக்க, ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்து உறுதி செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். அவர்கள் மட்டும், தங்களின் சார்பில் வேறு நபரை கடைக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில், அங்கீகார சான்று விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த சேவைக்கு, 'www.tnpds.gov.in' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, உணவு துறை துவக்கியுள்ளது. உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையதள விண்ணப்பத்தில் மூத்த குடிமக்கள், தங்களின் சார்பில் அனுப்பும் நபரின் பெயர், உறவு முறை உள்ளிட்ட விபரங்களுடன், 'ஆதார்' எண்ணை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்து, அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பர். நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாகும் என்பதால், குறித்த நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.