சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனையின்போது, கட்டுமான ஒப்பந்தம், யு.டி.எஸ்., பத்திரம் ஆகியவை தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு வந்தன. இந்த நடைமுறை கைவிடப்பட்டு, கூட்டு மதிப்பு அடிப்படையில் பதிவு செய்யும் புதிய முறை, 2023 டிச., 1ல் அமலுக்கு வந்தது. இதன்படி, புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனையின் போது மட்டுமே கூட்டு மதிப்பை கடைப்பிடிக்க வேண்டும். இதன்படி, நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு, கட்டடத்துக்கான பொதுப்பணித் துறை வரையறுத்த மதிப்பு ஆகியவற்றை சேர்த்து, கூட்டு மதிப்பு கணக்கிடப்படும். இந்த நடைமுறை, புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், 2023 டிச., 1க்கு பின் விற்கப்படும் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதே நேரம், ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளுக்கு இது பொருந்தாது என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பழைய தனி வீடுகள் விற்பனைக்கான பத்திரப்பதிவின்போது, கூட்டு மதிப்பு அடிப்படையிலான தொகையை குறிப்பிடுமாறு சார் - பதிவாளர்கள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதில் கட்டடத்தின் மதிப்பை, பொதுப்பணித் துறை பரிந்துரையை விட, 3 மடங்கு அதிகமாக குறிப்பிட சார் - பதிவாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், பழைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள், தனி வீடுகள் விற்பனையில் சார் - பதிவாளர்கள் கூட்டு மதிப்பை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். தரை தளம் மற்றும் முதல் தளம் வரை கட்டப்பட்ட தனி வீடுகளுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு போன்று கூட்டு மதிப்பை விதிப்பது, எந்தவிதத்திலும் நியாயமில்லை. இதனால், பழைய வீடு வாங்குவோர், பத்திரப்பதிவு நிலையில், 50,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.