சென்னை: ''தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பில், அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று, மாநில உரிமையை வென்றெடுப்போம்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்தார்.சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம், சென்னை கொட்டிவாக்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆளும் தி.மு.க., கூட்டணி கட்சிகள் தலைவர்கள் பலரும் வாழ்த்தி பேசினர்.பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இது, என் பிறந்த நாள் விழா மேடை அல்ல; வெற்றி விழா மேடை. வரும், 2026ம் ஆண்டு வெற்றிக்கான துவக்க விழா இது. என்னை சந்திக்கிறவர்கள், 'உங்கள் வெற்றிக்கு என்ன அடிப்படை' என்று கேட்பதுண்டு. அவர்களிடம் நான் சொல்வது, எங்கள் கூட்டணி தான் காரணம் என்பேன். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து வேறுபாடு வரும்; ஆனால், விரிசல் வராது. விரிசல் வருமா என, சிலர் எதிர்பார்த்து காத்திருக்கலாம். அவர்கள் ஆசையில் மண் தான் விழும். என்னை முதல்வராக்கியது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தான்; என் இதயத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள். கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை தான் தமிழகத்தையும், தமிழையும், சமூக நீதியையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்றியுள்ளது. ஏன், ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியுள்ளது.கடந்த, 2021 தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்திருந்தால், தமிழக உரிமையை பா.ஜ.,விடம் அடகு வைத்திருப்பர். அந்த கொடிய சக்தியிடம் மீட்டது தான் மதச்சார்பற்ற கூட்டணி. இந்தியாவுக்கு வழிகாட்டுகிறதும் நம் கூட்டணி தான். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கிற அளவில், சிறப்பான ஆட்சி நடத்துகிறோம். மத்திய அரசால் இதை தாங்க முடியவில்லை. நம் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழகத்தை பார்த்து பார்த்து வஞ்சிக்கின்றனர். கல்வியால் தான் தமிழகம் முன்னிலை மாநிலமாக இருக்கிறது என தெரிந்துகொண்டு, நம் கல்வியை சீர்குலைக்க தேசிய கல்வியை திணிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. கல்விக்கான நிதி தர, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மறுக்கிறார். மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று மிரட்டுகிறார். உங்கள் பெயர் தர்மேந்திர பிரதான். ஆனால், தர்மம் உங்களிடம் இல்லையே. நம் குழந்தைகளின் கல்வி கனவை சிதைக்கின்றனர். அதை தடுத்து நிறுத்தாமல், பிரதமர் வேடிக்கை பார்க்கிறார். தமிழகத்தில் ஹிந்தியை திணிக்காதீர்கள். தாய் மொழியான தமிழும், ஆங்கிலமும் எங்களுக்கு போதும். வடமாநிலத்தை சேர்ந்த பலரும் நம் நியாயத்தை புரிந்து, நமக்கு ஆதரவு தருகின்றனர். ஹிந்தி மொழி திணிப்பால் தங்கள் தாய் மொழி பாதிப்பு குறித்து, எனக்கு எழுதுகின்றனர். எல்லாருக்கும் வழிகாட்டியாக தமிழகம் இருக்கிறது. என்ன மிரட்டினாலும் ஹிந்தியை திணிக்க முடியாது. மத்திய அரசின் மிரட்டலுக்கு அஞ்சி நடுங்க, நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க., அல்ல. அடக்க நினைக்கிறவர்களை அடக்கி வைக்கிறவர்கள் நாங்கள். தமிழ் மொழிக்காக, எப்படிப்பட்ட அடக்குமுறையை எல்லாம் எதிர்த்து, துணிந்து போராடியவர்கள். லோக்சபாவில் அறிவுப்பூர்வமாக பேசுகின்றனர் என்பதற்காக, தொகுதிகளை குறைக்க நினைக்கின்றனர். அதனால் தான், முன்கூட்டியே இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். ஏற்கனவே பிரதமர் மோடி, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்த போது, 'எதிர்காலத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை உயரும்' என்றார். 'லோக்சபா தேர்தலுக்கு பின் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும்' என்றார். ஆனால், முன்னாள் பிரதமர்கள் நேரு, வாஜ்பாய் மாதிரி உறுதிமொழி கொடுக்கவில்லை. 'இப்போது இருக்கிற மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு கிடையாது. தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை' என்ற உறுதிமொழியை தாருங்கள். மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன். பிரதான கட்சியான அ.தி.மு.க., பங்கேற்கும் என, அறிவித்திருப்பது மகிழ்ச்சி. சில கட்சிகள் பங்கேற்க மாட்டோம் என்று, சொல்கின்றன. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதீர்கள். ஓரணியில் நின்று, மாநில உரிமையை வென்றெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும். தவறவிட்டால் நமக்கான அடையாளம் தொலைந்து விடும். ஓரணியாக இருப்போம்; வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வருக்கு திருமாவளவன் யோசனை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: இந்தியாவில் யாரும் சிந்திக்காத வேளையில், முதன்முதலாக, லோக்சபா தொகுதிகள் குறையும் குற்றச்சாட்டை வெளிப்படுத்தினார். தொகுதிகள் மறுசீரமைப்பு எதிர்ப்பு விவகாரத்தில், தென் மாநிலங்கள் பங்கேற்கும் மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும். தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவில் மாநிலங்களை ஒருங்கிணைத்து, ஸ்டாலின் முன்னெடுத்து செல்ல வேண்டும்.மீண்டும் ஸ்டாலின் தலைமையில், ஆட்சி அமையும் போது தான், உழைக்கும் மக்களின் நலன்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க முடியும்.இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்: தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களுக்கு பஞ்சமே இல்லை. செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், நிதி தர மாட்டேன் என, மத்திய அமைச்சர் அச்சுறுத்துகிறார். இப்படியான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வலுவான தலைவராக, முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம்: தி.மு.க., அரசின் திட்டங்கள், மக்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. மத்திய அரசை எதிர்ப்பதில், முதல்வர் ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும். தேர்தலின் போது கொடுக்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வரும், அமைச்சர்களும் சாதனைகளை சொல்கின்றனர். மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பதை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அவற்றை நிறைவேற்றுவதன் வாயிலாக, 2026 சட்டசபை தேர்தலிலும், மாபெரும் வெற்றியை பெறலாம். அதற்கான முன் முயற்சிகளை முதல்வர் எடுக்க வேண்டும்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தன், 15 வயதிலேயே கோபாலபுரம் தி.மு.க.,வை ஆரம்பித்து, அதில் அண்ணாதுரையையே பேச வைத்த சாமர்த்தியசாலி ஸ்டாலின். எமர்ஜென்சி கால கொடுமைகளை தாங்கி, அண்ணாதுரை, கருணாநிதி வழியில் கடுமையாக உழைத்து, ஸ்டாலின் முதல்வராகி இருக்கிறார். ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்கவும், வாரணாசியை இந்தியாவின் தலைநகராக்கவும் திட்டமிட்டு, பா.ஜ., அரசு செயல்படுகிறது. இதை எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலின் அரசு நீடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.மேலும், கூட்டணி கட்சி தலைவர்கள், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஸ்ரீதர் வாண்டையார், பொன்.குமார், கருணாஸ், அம்மாசி, முருகவேல்ராஜ், ஈஸ்வரன், அருணாசலம் உள்ளிட்டோர் பேசினர்.