சென்னை : லோக்சபா தேர்தலில், 'பம்பரம்' சின்னம் ஒதுக்கக்கோரிய ம.தி.மு.க., விண்ணப்பத்தின் மீது, இன்று(மார்ச் 27) காலை, 9:00 மணிக்குள் முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவில், லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர்.பம்பரம் சின்னம் பொதுவான சின்னங்கள் பட்டியலில் உள்ளதா என்பது குறித்து, தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தது. அதன்படி, பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம் பொதுச்சின்னமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும், ம.தி.மு.க., விண்ணப்பத்தின் மீது இன்று காலை முடிவெடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்க உள்ளதால், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைக்கும்படி, ம.தி.மு.க., தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய விண்ணப்பத்தின் மீது, இன்று காலை 9:00 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளி வைத்தது.