உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கல்வியை தமிழில் தர முடியும்!

மருத்துவ கல்வியை தமிழில் தர முடியும்!

சென்னை: “அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் சார்ந்த கல்வியை தமிழில் தர முடியும். தமிழகத்தில் அதற்கு சாத்தியம் உள்ளதா என்றால், தேசிய மருத்துவ ஆணையத்தின் இசைவை பொறுத்தது,” என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன் பேசினார்.சென்னை வளர்ச்சி கழகத்தின் பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டு கழகம், அண்ணா பல்கலை பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் ஆகியவை சார்பில், இரண்டாம் உலகத்தமிழ் வளர்ச்சி இரண்டு நாள் மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது.

கேலி, கிண்டல்

பள்ளி, கல்லுாரி, பல்கலை, தொழில்நுட்பம், சட்டம், மருத்துவ கல்விகளில் தமிழ் என்ற தலைப்பிலான நிகழ்வில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது:அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் சார்ந்த கல்வியை தமிழில் தர முடியும். தமிழகத்தில் அதற்கு சாத்தியம் உள்ளதா என்றால், தேசிய மருத்துவ ஆணையத்தின் இசைவை பொறுத்தது. சென்னை மருத்துவக் கல்லுாரியில், பிறமொழி மாணவியரும் இருந்தனர். அவர்களுக்கான வாய்மொழி தேர்வில், நோயாளி சொல்வதை கேட்டு, அதற்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும். ஆனால், தமிழ், தெலுங்கு பேசுவோர் நோயாளிகளாக வருவர். அதில், மருத்துவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, தமிழ், தெலுங்கு வகுப்புகள் நடந்தன.அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றிய போது, தமிழ் மாணவர்களுக்காக, பாடவேளை முடிந்ததும் விளக்க வகுப்புகள் நடத்தினோம். முதலில் ஆர்வம் காட்டிய மாணவர்கள் பின், கேலி, கிண்டலுக்கு ஆளானதால் வரவில்லை. மருத்துவ துறையில் தினமும் புதிய புதிய சொற்கள் உருவாகும் நிலையில், அவற்றுக்கான தமிழ் கலைச்சொற்களை உடனே உருவாக்கி, அங்கீகரித்து, அதை, பொதுவாக்குவதில் சிக்கல் உள்ளது. நாங்கள், 10,000 கலைச்சொற்களை உருவாக்கி, சொற்குவையில் அளித்தோம்.இவ்வாறு அவர் பேசினார்.

அனுமதித்தேன்

அமெட் பல்கலை இணைவேந்தர் திருவாசகம் பேசுகையில், “நான் சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்தபோது, அனைத்து படிப்புகளையும் தமிழில் தேர்வெழுத அனுமதித்தேன். பிஎச்.டி., ஆய்வறிக்கையை தமிழில் சமர்ப்பிக்க வகை செய்தேன். அப்போதில் இருந்து தான், மணிக்கூண்டில், மணிக்கு ஒரு முறை திருக்குறள் ஒலித்தது,” என்றார்.அரசு சட்ட பல்கலை துணைவேந்தர் சந்தோஷ்குமார் பேசுகையில், “உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், பல்வேறு சட்டங்களில் குழப்பங்கள் வர, பிராந்திய மொழிகளில் சட்டம் இல்லாதது தான் காரணம். “அதனால், சட்டங்களும், வழக்காடுதலும் பிராந்திய மொழிகளில் இடம் பெறலாம் என்றார். ஆனாலும், தமிழில் இடம்பெறுவதற்கு பல்வேறு திசைகளில் இருந்தும் தடைகள் வருகின்றன,” என்றார்.திறந்தநிலை பல்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், “சுதந்திரம் பெற்றதில் இருந்து, தமிழ்வழி கல்விக்காக, 52 அரசாணைகள் வெளியாகி விட்டன. இன்னும் போராடு கிறோம்,” என்றார்.

தமிழ் பாடம் கட்டாயம்?

விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், “தமிழகத்தில் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்க, தமிழ் வழியில் படித்தோருக்கு கல்லுாரி சேர்க்கையில், 20 சதவீத இடஒதுக்கீடு தரப்படுகிறது. அறிவியல், மருத்துவ நுால்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை, 10ம் வகுப்பு வரை கட்டாயமாக்க பாடுபடுகிறோம். தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்துவோம்,” என்றார்.சட்ட அமைச்சர் ரகுபதி பேசுகையில், “சட்டக்கல்வியை தமிழில் படிக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். சட்ட மாணவர்களுக்காக, 37 மத்திய சட்டங்கள், 63 தமிழக சட்டங்கள் என, 100 சட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து நுாலாக வெளியிட்டுள்ளோம். “சென்னை சட்டக் கல்லுாரியில், சட்டத்தமிழ் என்ற பாடத்தை கட்டாயமாக்க உள்ளோம். சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அனுமதிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி உரிமையையும் பெறுவோம்,” என்றார்.-பொன்முடிஉயர் கல்வித்துறை அமைச்சர்.

எனக்கு ஹிந்தி தெரியும்!

முன்பெல்லாம் அரசு துவக்க பள்ளிகளில், தமிழ் தான் பயிற்று மொழி. பி.யு.சி., என்ற மேல்நிலை பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் ஆங்கிலம் மட்டும் தான் பயிற்று மொழியாக இருந்தது. தமிழில் கேள்விகூட கேட்க முடியாது. அந்த நிலையில், நாங்கள் எல்லாம் ஆங்கிலத்தை தட்டுத்தடுமாறி படித்து புரிந்து, 17 ஆண்டுகள் பேராசிரியராகவும் இருந்தேன். அதனால் தான், தமிழ், ஹிந்தி எனும் இருமொழி கொள்கையே தமிழகத்துக்கு சிறந்தது என, அண்ணாதுரை கூறினார். என்றாலும், நான் ஹிந்தியில் பிராத்மிக், மத்யமா தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அது வேறு கதை. ஆனால், ஹிந்தியை கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் தாய்மொழி கல்வி வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அரசுப்பணி தேர்வுகளில், ஆங்கிலம், ஹிந்தியில் மட்டும் வினாத்தாள் இருந்த நிலையில், தமிழும் இடம் பெறுவதை உறுதி செய்துள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஆக 13, 2024 22:05

முதலில் தமிழக முதல்வர் சுத்த தமிழில், துண்டுக்காகிதம் உதவி இல்லாமல் தானாக பேச கற்றுக்கொடுக்கவும்.


ஆரூர் ரங்
ஆக 13, 2024 16:15

மாநில அரசு நடத்தும் உருது பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமில்லை. அரசுப்பள்ளியே இப்படியென்றால்?. அட நிறைய அமைச்சர்களுக்கே ழகரம் உச்சரிக்க வராது.


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2024 15:28

மருத்துவ கல்வியை கல்வித்தந்தைகளின் பிடியில் இருந்து வெளியே கொண்டுவர முடியாத புரோக்கர்கள்


Jysenn
ஆக 13, 2024 10:39

Komaaligal Rajyam.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை