ஞானசேகரன் மீது குண்டாஸ் ரத்து செய்ய கோரி தாய் வழக்கு
சென்னை:சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து, அவரது தாய் தாக்கல் செய்த மனுவுக்கு, நான்கு வாரங்களுக்குள் காவல் துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஞானசேகரனின் தாய் கங்காதேவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகன் ஞானசேகரனை, கடந்தாண்டு டிசம்பரில் போலீசார் கைது செய்தனர். கடந்த ஜன., 5ல் ஞானசேகரனை, சென்னை மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மகன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு, கடந்தாண்டு டிசம்பரில் தான் பதிவு செய்யப்பட்டது.ஆனால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, 2019ம் ஆண்டில் பதிவான பழைய வழக்குகளை காரணம் காட்டி, ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.அதற்கான எந்த விதிமுறைகளையும், மாநகர காவல் ஆணையர் முறையாக பின்பற்றவில்லை. எனவே, சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்ட தன் மகனை விடுவிப்பதுடன், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் காவல் துறை பதிலளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.