தேசிய குத்துச்சண்டை: 14 வயது மாணவர் பிரிவை சேர்க்க உத்தரவு
சென்னை : 'இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தேசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச் சண்டை போட்டியில் இருந்து 50 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 14 வயது மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜார்க்கண்டில் நாளை நடக்கும் போட்டியில் 50 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள 14 வயது மாணவர்களை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.சென்னை, அடையார் காந்தி நகரை சேர்ந்த மாணவர் அல்பெரிக் அபய் சார்பில், அவரது தந்தை ஆரோக்கிய சதீஷ் தாக்கல் செய்த மனு:சி.ஐ.எஸ்.சி.இ., எனும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் பாடத்திட்ட பள்ளி மாணவ - மாணவியர் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் விதமாக, 2018 முதல் தேசியளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், 14 வயதுடைய 50 கிலோவுக்கு அதிகமான எடை பிரிவில், மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டிக்கு, அடையாறு செயின்ட் மைக்கேல் அகாடமி பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் அல்பெரிக் அபய் என்ற மாணவர் விண்ணப்பித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில், செப்., 13ல் நடக்கும் குத்துச் சண்டை போட்டியில், இப்பிரிவு நீக்கப்பட்டு உள்ளதாக, சி.ஐ.எஸ்.சி.இ., அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த, நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:ஐம்பது கிலோவுக்கு மேல் உள்ள மாணவியர் பிரிவு, இந்தாண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிரிவை மட்டும் நீக்கியது பாரபட்சமானது. ஜாதி, இனம், மதம், பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14க்கு, இது எதிரானது. அந்த பாகுபாட்டை தொடர அனுமதிக்கவும் முடியாது.சி.ஐ.எஸ்.சி.இ.,யின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், நாளை நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளில், 50 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள 14 வயது மாணவர்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.