தட்டச்சு, சுருக்கெழுத்துக்கு பிப்ரவரியில் புதிய பாடம்
சென்னை : 'அடுத்தாண்டு பிப்ரவரி முதல் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படும்' என, மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த இயக்ககம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் போன்ற தொழில்நுட்ப தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை, இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் என்ற நிலைகளில் நடத்தப்படுகின்றன. மேலும், அரசு கணினி ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வும் நடத்தப்படுகிறது.இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்ட குழு, சமீபத்தில் அனைத்து பாடத்திட்டத்தையும் மாற்றியமைத்தது. அதில், அரசு கணினி சான்றிதழ் படிப்புக்கான புதிய பாடத்திட்டம், ஏற்கனவே அமலான நிலையில், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் பிப்ரவரியில் அமலாகும். புதிய பாடத்திட்ட விபரம், மதிப்பெண் முறைகள் உள்ளிட்டவை, https://dte.tn.gov.in/revisedgtesyllabus என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.