| ADDED : மே 29, 2024 12:37 AM
சென்னை:தமிழகத்தில் 90,000த்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 7,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகின்றனர். 102 மாதங்களுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படவில்லை. இதனால், மருத்துவ செலவுக்கு போதிய பணமில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, மருத்துவ காப்பீடு வழங்க வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஓய்வூதிய நிதி அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில், ஓய்வூதியத்தில் மாதந்தோறும் காப்பீட்டுக்கான பிரீமிய தொகை 588 ரூபாய் பிடித்தம் செய்து, காப்பீடு வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. அதை ஏற்க முடியாது என்றும், அரசே காப்பீடு செலவை ஏற்க வேண்டும் என்றும், ஓய்வூதியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு, தி.மு.க.,வின் தொ.மு.ச., யூனியன் பொருளாளர் நடராஜன் அனுப்பியுள்ள கடிதம்:மருத்துவ காப்பீட்டு திட்டத்தொகை எவ்வளவு; தகுதி வாய்ந்த சிகிச்சைக்குரிய நோய்கள் எவை; 2022 ஜூலை முதல் 2026 ஜூன் வரை திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றால், முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதா; அப்படியென்றால், 2022 ஜூன் முதல் இன்றைய தேதி வரையிலான மருத்துவத்தொகை அளிக்கப்படுமா உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க முடியாத நிலையில் திட்டத்தை அமல்படுத்தினால் சிக்கல்கள் உருவாகும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.