கோவில் நிலம் பாதுகாக்க மனு பரிசீலிக்க உத்தரவு
சென்னை:கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க கோரிய மனுவை, அரசு பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நிலங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால், கோவில்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள தாசில்தார்கள் சட்டப்படி செயல்பட்டால், விவசாய நிலங்களை பாதுகாக்கலாம். இதுகுறித்து, அரசுக்கு நான் அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து, தகுதி அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க, நில சீர்திருத்த ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவர் தரப்பையும் கேட்டு, 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.