உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படம்மாசி மக தீர்த்தவாரி * திரளான பக்தர்கள் புனித நீராடல்

படம்மாசி மக தீர்த்தவாரி * திரளான பக்தர்கள் புனித நீராடல்

தஞ்சாவூர்:கும்பகோணம் மகாமக குளத்தில், மாசி மகத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி, சைவ தலங்களான காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில்களிலும், 4ம் தேதி வைணவ தலங்களில் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக சுவாமி ஆகிய கோவில்களிலும், கொடியேற்றப்பட்டு விழா நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை காலஹஸ்தீவரர் கோவில் தேரோட்டமும், மாலை சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதே போல, காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம், மகாமக குளத்தைச் சுற்றி நடைபெற்றது. விழாவின், முக்கிய நாளான நேற்று காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் என, 10 சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன், வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர்.பிறகு, மகாமக குளத்தில் அஸ்திர தேவருக்கு, மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, 'சிவாய நம, சிவாய நம' என கோஷத்துடன், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, சுவாமிகள் தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் அந்தந்த கோவில்களுக்கு வீதியுலாவாகப் புறப்பட்டு சென்றன. மகாமக குளத்தில், துறவிகள் பங்கேற்ற மகா ஆரத்தி நடந்தது.

3 கோவில்கள் தேரோட்டம்

மாசி மகத்தையொட்டி, சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் சக்கரபாணி சுவாமி, பாமா, ருக்மணி உடனாய ராஜகோபால சுவாமி, அம்புஜவல்லி தாயார் உடனாய ஆதிவராகப்பெருமாள் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்தருளி, தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தவாரி நடைபெற்றது.

தெப்ப உற்சவம்:

சாரங்கபாணி சுவாமி கோவிலில், பெருமாள் உபயநாச்சியாருடன் யாத்ரா தானம் கண்டருளி வீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, பொற்றாமரை குளத்தில், வடிவமைக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளினார். இரவு 11:00 மணிக்கு பெருமாள் உபயநாச்சியாருடன் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் வைபவத்துடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை