உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு பாளை., கல்லுாரி பேராசிரியை விமலா தேர்வு

சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு பாளை., கல்லுாரி பேராசிரியை விமலா தேர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி துாய சவேரியார் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர், 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த பங்கிராஜ்- மரியம்மாளின் இரண்டாவது மகள் விமலா, 36. பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் செயின்ட் ஊர்சிலாஸ் பள்ளிலும், பிளஸ் 2 படிப்பை திருவட்டார் அருணாச்சலம் பள்ளியிலும் முடித்தார்.

பட்டங்கள்

தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வீட்டில் இருந்தபடியே அண்ணாமலை பல்கலைக் கழக தொலை நிலைக்கல்வியில் முடித்தார். புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், ஆறு ஆண்டு கள் கல்வி பயின்று எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டங்கள் பெற்றார்.விமலா சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். அவரது தாய் மரியம்மாள், ஒரு மருத்துவமனையில் வெந்நீர் பானைகளை சுமந்து சென்று, முதியோர்களை பராமரிக்கும் கடின வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றினார். இச்சூழலில் குடும்ப சுமையை சுமந்த தாயின் தியாகமே, தன் கல்வி பயணத்திற்கு துணை புரிந்ததாக விமலா உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். பள்ளியில் முதலிடம் பிடித்தும், தன் அக்கா விஜிலா, தம்பி வின்ஸ் ஆகியோர் தனக்காக படிப்பை விட்டதாகவும் கூறியுள்ளார். விமலா இதுவரை நான்கு மொழிபெயர்ப்பு நுால்களை எழுதியுள்ளார். மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய, 'எண்ட ஆண்கள்' என்ற நுாலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக, 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ளார்.மலையாளத்தில் இருந்து தமிழுக்கு, விவேகானந்தம் - நாவல், எண்ட ஆண்கள் - தன் வரலாறு, மலையாள மொழியின் தொல்காப்பியத்திலான தாக்கம் - ஆய்வு என, மொழிபெயர்த்து உள்ளார். தமிழிலிருந்து மலையாளத்திற்கு குறுந்தொகை, கம்பராமாயணம் - யுத்த காண்டம் என, மொழி பெயர்த்து உள்ளார்.கடந்த ஆண்டு இவரது தமிழ்ப்பணியை பாராட்டி கவர்னர் ரவி விருது வழங்கினார். என்ட ஆண்கள் நுாலை தமிழில் மொழியாக்கம் செய்ய, சாகித்ய அகாடமி விருது பெற்ற குளச்சல் யூசுப் தான் தமக்கு ஊக்கம் தந்ததாக கூறினார். இவரது நாவல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பாராட்டு விழா

பாளை துாய சவேரியார் கல்லுாரியில் நேற்று நடந்த மகளிர் தின விழாவில், கல்லுாரி முதல்வர் காட்வின் ரூபஸ் அடிகள், கலைமனைகளின் அதிபர் இன்னாசிமுத்து அடிகள் மற்றும் பலர் விமலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை