உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதியை தராத மத்திய அரசு போராடாத மாநில அரசு சாயத்தை வெளுக்கிறார் பழனிசாமி

நிதியை தராத மத்திய அரசு போராடாத மாநில அரசு சாயத்தை வெளுக்கிறார் பழனிசாமி

மத்திய அரசு கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கும், நிதியை போராடி பெறாத தி.மு.க., அரசுக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு 573 கோடி ரூபாயை ஜூன் மாதம் மத்திய அரசு விடுவித்திருக்க வேண்டும்; ஆனால், விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தாததே, இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தங்கள் கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து, மனித வளத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

கபட நாடகம்

மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை. நிபந்தனைகளின் அடிப்படையில் தான், கல்வி வளர்ச்சிக்கு நிதி தர முடியும் எனக் கூறுவது ஏற்கக்கூடியதல்ல. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி, 48 ஆண்டுகளாகின்றன. இதில், 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு பெற்றிருந்தும், தற்போது கணிசமான எம்.பி.,க்களை வைத்திருந்தும், தி.மு.க., மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், 'நீட்' பிரச்னையைப் போல, கல்விப் பிரச்னையிலும் கபட நாடகம் ஆடுகிறது.'ஒரே வார்த்தையில் அழைத்தோம்; ராணுவ அமைச்சர் நேரில் வந்து, கருணாநிதி நாணயத்தை வெளியிட்டார்' என தம்பட்டம் அடித்த முதல்வர், அதேபோல் ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட் தேர்வை ஒழிக்காததும் ஏன்?

முதல் தவணை நிதி

இரட்டை வேடம் போடும் தி.மு.க.,வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள, மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.,வும் இணைந்து நடத்தும் நாடகங்களால், தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை; கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு, மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசு உடனடியாக, முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், உரத்த குரலில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கூடுதல் நிதி வேண்டும்!தமிழக கல்வி அமைச்சர், மகேஷ் கூறியதாவது:'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதத்தில் வரவேண்டிய 573 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை.ஒரு மாதத்திற்கு முன், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பார்லிமென்ட் குழு தலைவர் எம்.பி., கனிமொழி தலைமையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தோம். பல லட்சம் குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில், விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்து, அரசியல் செய்யக்கூடாது என நேரடியாகவே வலியுறுத்தினோம். பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்தும் அந்த நிதி வரவில்லை. ஜூன் மாதத்துக்கான 573 கோடி ரூபாய் மட்டுமல்ல; கடந்த ஆண்டு வர வேண்டிய கடைசி தவணைத் தொகை 249 கோடி ரூபாயையும் நிறுத்தி வைத்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தினால் தான், நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது போல் செயல்படுகின்றனர். கடந்த 2020ல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், 2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து நடைமுறையில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறுவது நியாயமல்ல. வரும் 2030ம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சியின் இலக்கை அடைய, இப்போதே தமிழகத்தை ஊக்கப்படுத்தி, கூடுதலான நிதி ஒதுக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, விவாதம் சார்ந்த விவகாரம். அதை காரணம் காட்டி, மாணவர்களின் கல்விக்கான பங்களிப்பு நிதியை நிறுத்தி வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை