உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வழி தடங்களை மாற்றும் செலவை மக்கள் மீது சுமத்தக்கூடாது: ஐகோர்ட்

மின்வழி தடங்களை மாற்றும் செலவை மக்கள் மீது சுமத்தக்கூடாது: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்ட மின்கோபுர வழித்தடங்களை மாற்றுவதற்கான செலவை, நில உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது சுமத்தக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தில், தங்களுக்கு சொந்தமான நிலம் வழியாக, உயர் அழுத்த மின்கோபுர வழித்தடங்களை, தனியார் நிறுவனங்கள் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நில உரிமையாளர்களான சங்கர் மற்றும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தனர். புறம்போக்கு நிலம் அருகில் இருந்தும், நான்கு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு நடந்துள்ளது என்றும், மின்கோபுர வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரினர்.இம்மனுக்கள், நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ''ஆட்சேபனை தெரிவித்த நிலையிலும், மின்கோபுர வழித்தடங்களை அமைத்துள்ளனர். வழித்தடங்களை மாற்ற வேண்டும் என்றால், அதற்கான செலவாக, 81.11 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கேட்பது நியாயமற்றது. ஒரு ரூபாய் கூட அரசுக்கு செலுத்த வேண்டியதில்லை,'' என்றார்.அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'ஏற்கனவே மின்கோபுர வழித்தடங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அவற்றை மாற்ற மனுதாரர்கள் விரும்பினால், அதற்குரிய செலவுத் தொகையை ஏற்க வேண்டும்' என்றார்.இரு தரப்பு வாதங்களுக்குப்பின், நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க, மின்கோபுர வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன; பொதுநோக்கத்துக்காக அல்ல.தனியார் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே, இந்த வழித்தடங்கள் அமைக்கப்படும்போது, பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படாமல் பார்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவதே, அரசு அதிகாரிகளின் கடமை; தனியார் நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவதற்காக அல்ல.வழித்தடங்களை மாற்றி அமைத்தால், இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு வேண்டாம் என, மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். மாற்றுப்பாதை இருக்கும்போது, மனுதாரர்களின் நிலம் வழியாக அமைத்துள்ளனர். இதை ஏற்க முடியாது; அனுமதி அளித்த கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மனுதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்களின் நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மின்கோபுர வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும். தனிநபர்கள் மீது செலவுத் தொகையை சுமத்தக்கூடாது. எட்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை