செந்தில் பாலாஜி வழக்கு கோர்ட் உத்தரவை எதிர்த்து மனு
சென்னை:அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது, பணி நியமனங்களுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. மொத்தம் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதில், தனித்தனியாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாம் ஒன்றாக விசாரிக்கப்படும் என, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு தடை கோரியும், அந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சுப்பிரமணியன் ஆஜராகி, ''குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையில், அந்த வழக்குகளை எல்லாம் தனி வழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டும்.ஒன்றாக விசாரிப்பதால் விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும்,'' என்றார்.மனுவுக்கு மார்ச் 13க்குள் பதில் அளிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.