உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தயாராகிறது புதிய ஜவுளி கொள்கை ஸ்பின்னிங் மில்களில் கூடுதல் கவனம்

தயாராகிறது புதிய ஜவுளி கொள்கை ஸ்பின்னிங் மில்களில் கூடுதல் கவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்:''தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக அரசின் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்தியா நிட்பேர் அசோசியேஷன், பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை சார்பில், 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது.கண்காட்சியை துவக்கி வைத்து தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியதாவது:தமிழக அரசு புதிய ஜவுளி கொள்கையை தயாரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள், அதிக மானியம் வழங்குவதாகக் கூறி, தொழில் துவங்க அழைப்பு விடுக்கின்றன. தமிழகத்தில் தொழில்கள் நீடித்த நிலையான தன்மையுடன் இயங்குகின்றன; மானியமும் அதிக அளவு ஒதுக்கப்படுகிறது.'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்' எனப்படும் தொழில்நுட்ப ஜவுளி, 12 வகையான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, விளையாட்டு சீருடை உற்பத்தி மேம்பாட்டில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஜவுளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய ஜவுளி கொள்கையில், 'ஸ்பின்னிங்' மில்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். நாட்டின் 35 சதவீத நுாற்பாலைகள் தமிழகத்தில் உள்ளன. அவற்றை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, 6 சதவீத வட்டி மானியத்துடன் கடன் உதவி வழங்க, 500 கோடி ரூபாய் நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.விசைத்தறி தொழில் பரவலாக இருந்தும், 'பிராசசிங்' தொழில் பிரிவில் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டோம். உற்பத்தியாகும் துணிகள், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் செல்கின்றன. தமிழகத்தில் பிராசசிங் யூனிட்டுகளை உருவாக்க முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி துறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு வழங்கப்படும் மானியத்தை 25 சதவீதமாக உயர்த்தி, தொழில் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற, ஒரு நிறுவனம் குறைந்தது, 50 கோடி ரூபாய் முதலீடு செய்வதுடன், 50 தொழிலாளர்களை கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து நிலையாக தொழில் செய்வதை உறுதி செய்வதற்காக, மூலதன மானியம், ஆண்டு தவணையாக, பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அந்த துறையில் தமிழகத்தில் அதிக முதலீட்டை ஈர்க்க, தற்போது வழங்கப்படும் மூலதன மானியம், 15 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மருத்துவம், மோட்டார் வாகனம், பாதுகாப்பு போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படும் ஜவுளி பொருட்கள், தொழில்நுட்ப ஜவுளி எனப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை