சென்னை: 'ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரி 1ல் வெளியிடப்படும். அதுவரை, தற்போதுள்ள கால அட்டவணை நீட்டிக்கப்படுகிறது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணியர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும்.இதில், அந்தந்த மண்டலங்களில், புதிய ரயில்கள் இயக்கம், கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறும்.தெற்கு ரயில்வேயில், பயணியர் நலச்சங்கங்கள், எம்.பி.,க்கள் சார்பில், கடந்த சில வாரங்களாக மனு அளித்து வருகின்றனர்.குறிப்பாக, கூடுதல் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும், குறுகிய துார பயணியர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் கூடுதல் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் விரைவு ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் வெளியாகும் என, எதிர்பார்த்து இருந்த நிலையில், 'அடுத்த ஆண்டு ஜன.,1ல் வெளியிடப்படும்.அதுவரை, தற்போதுள்ள கால அட்டவணை நீட்டிக்கப்படுகிறது' என, ரயில்வே வாரியம் நேற்று முன்தினம் தெரிவித்துஉள்ளது. இது, ரயில் பயணியருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பயணியரின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். ரயில்களின் சேவையை மேம்படுத்துவதிலும், ரயில்களை தாமதம் இன்றி இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.சில நிர்வாக காரணங்களுக்காக, புதிய கால அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படுகிறது. அதுவரை தற்போதுள்ள கால அட்டவணை தொடரும்' என்றனர்.