உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருத்தணியில் 1 மணி நேரம் மழை; மின்கம்பம், பள்ளி சுவர் உடைந்தது

திருத்தணியில் 1 மணி நேரம் மழை; மின்கம்பம், பள்ளி சுவர் உடைந்தது

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ஒரு வாரமாக வெயில் கொளுத்திய நிலையில், நேற்று காலை பெய்த ஒரு மணி நேர கனமழையால், மின்கம்பம் உடைந்து விழுந்தது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நான்கு நாட்களாக, 108 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.இந்நிலையில், நேற்று காலை 7:00 முதல் 8:00 மணி வரை திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், திருத்தணி நகரின் பல பகுதிகளில் மழைநீரில் கழிவுநீர் கலந்து, கறுப்பு நிறத்தில் ஆறாக ஓடியது. அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். அத்துடன், காசிநாதபுரம் கிராம அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம், பலத்த காற்றால் வேருடன் சாய்ந்து, மின்கம்பத்தின் மீது விழுந்தது.இதில், மின் கம்பம் உடைந்து, சாலையில் விழுந்தது; சுற்றுச்சுவரும் சேதமடைந்தது. தகவலறிந்த மின் வாரியத்தினர், உடனடியாக, அந்தப் பகுதிக்கான மின்சாரத்தை துண்டித்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, புதிய மின்கம்பம் அமைத்து, மதியம் 3:00 மணிக்கு மேல் மின் வினியோகத்தை சீராக்கினர். காலையில் பெய்த ஒரு மணி நேர மழைக்கு பின், வழக்கம் போல வெயில் கொளுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை