உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகைகளை மீட்டு தாருங்கள்; போலீசில் குவியும் புகார்கள்

நகைகளை மீட்டு தாருங்கள்; போலீசில் குவியும் புகார்கள்

சென்னை: தேவநாதன் தலைவராக இருந்த, மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்ட் நிதி நிறுவனத்தில், 3 கிலோ நகைகள் மட்டுமே பறிமுதலான நிலையில், மீதமுள்ள நகைகளை மீட்க வேண்டும் என, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், நுாற்றுக்கணக்கானோர் மனு அளித்துள்ளனர்.

525 கோடி

லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தேவநாதன், 62, மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்ட் நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இவர், 525 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை கைது செய்து, ஏழு நாள் காவலில் விசாரித்துள்ளனர். மூவரின் வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.நிதி நிறுவன பணத்தில், 24.50 கோடி ரூபாய் கையாடல் நடந்து இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.

300 கிலோ நகை

மேலும், தேவநாதன் உள்ளிட்ட மூவரையும், மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள, நிதி நிறுவன அலுவலகத்திற்கு அழைத்து சென்று, ஐந்து பெட்டிகளில் ஆவணங்கள் மற்றும், 3 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நிதி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மூத்த குடிமக்கள், 300 கிலோ நகையை நிதி நிறுவனத்தின் லாக்கரில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நகைகளை கையாடல் செய்யவில்லை என, தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அப்படியானால், அந்த நகைகள் எங்கே என, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

800 புகார்

இதற்கிடையே, நகைகளை மீட்டுத்தர வேண்டும் என, சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில் செயல்படும், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், 800க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'தேவநாதன் உள்ளிட்டோர் மீது, பணம் மீட்பை காட்டிலும் நகைகளை பறிமுதல் செய்து தாருங்கள் என, புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 'இது தொடர்பாக விசாரணை விரிவடைந்து உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ