உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்டெய்னர் லாரி மோதி இறந்த மாலுமி குடும்பத்திற்கு ரூ.1.09 கோடி இழப்பீடு

கன்டெய்னர் லாரி மோதி இறந்த மாலுமி குடும்பத்திற்கு ரூ.1.09 கோடி இழப்பீடு

சென்னை: சென்னை துறைமுகத்தில், கன்டெய்னர் லாரி மோதியதில் உயிரிழந்த கப்பல் மாலுமியின் குடும்பத்திற்கு, 1.09 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை துறைமுகத்தில் மாலுமியாக பணிபுரிந்தவர் தமிழ்மணி, 51. இவர், 2021 பிப்., 28ல், தன் இரு சக்கர வாகனத்தில், சென்னை துறைமுக வளாகத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கன்டெய்னர் லாரி ஒன்று, திடீரென தமிழ்மணியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. தமிழ்மணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.தமிழ்மணியின் இறப்புக்கு, 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அவரது மனைவி வேல்விழி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் நடந்தது. அப்போது, ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், 'இறந்தவரின் இரு சக்கர வாகனம், லாரியின் இடப்பக்கம் இடித்ததில், அவர் கீழே விழுந்துள்ளார். விபத்துக்கு இறந்தவரின் கவனக்குறைவே காரணம். 'சரியான வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கி இருந்தால், இந்த விபத்து நடந்திருக்காது. எனவே, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதிடப்பட்டது.இதையடுத்து நீதிபதி, 'அதிவேகம், அஜாக்கிரதையாக லாரியை டிரைவர் இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம். சாட்சிகள், இதை தெளிவுப்படுத்தி உள்ளதால், காப்பீடு நிறுவனம் தரப்பில் முன்வைத்த வாதம் ஏற்புடையதல்ல. 'எனவே, மனுதாரர்களுக்கு, 1 கோடியே, 9 லட்சத்து, 91,000 ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்' என்று, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ