| ADDED : ஏப் 28, 2024 12:58 AM
சென்னை: 'டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோரை உடனே கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்' என, அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் சங்க ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலர் தனசேகரன் கூறியதாவது:நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரியும் வனராஜா, உதவி விற்பனையாளர் உதயகுமார், 26ம் தேதி இரவு பணி முடிந்து திரும்பும் போது, சில சமூக விரோதிகள் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், வனராஜாவின் கைமணிக்கட்டு துண்டாகி விட்டது. உதயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மதுக்கடையில் மேற்பார்வையாளராக பாலசுப்ரமணியன் பணிபுரிகிறார். இவர், 26ம் தேதி இரவு பணி முடிந்து, வீட்டிற்கு செல்லும் போது, அவரை தாக்கிய சமூக விரோதிகள், கையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றுஉள்ளனர்.இதுபோன்று ஊழியர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனவே, ஒவ்வொரு கடைக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனே கைது செய்து, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.