மத்திய நிதி நிறுவனங்கள் தந்த கடனுக்கான வட்டியை குறையுங்கள் செந்தில்பாலாஜி கோரிக்கை
சென்னை:'மத்திய அரசுக்கு சொந்தமான ஆர்.இ.சி., - பி.எப்.சி., நிதி நிறுவனங்கள், கடன்களுக்கான வட்டியை குறைந்தபட்சம், 1.50 சதவீதம் குறைக்க வேண்டும்' என, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநில மின் துறை அமைச்சர்களின் குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.மத்திய மின் துறை இணை அமைச்சர் தலைமையில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், மாநில மின் துறை அமைச்சர்களின் குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை செயலர் பீலா வெங்கடேசன், மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குனர் விஷு மஹாஜன் பங்கேற்றனர்.கூட்டத்தில், செந்தில் பாலாஜி பேசியதாவது: கடந்த, 2017 - 18ல், 19.47 சதவீதமாக இருந்த தமிழக மின் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த வணிக இழப்பு, 11.39 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கொள்முதல், வட்டி செலவு, மின் வாரியத்திற்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.எனவே, ஆர்.இ.சி., எனப்படும் ரூரல் எலக்ட்ரபிகேஷன் கார்ப்பரேஷன், பி.எப்.சி., எனப்படும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், கடன்களுக்கான வட்டியை குறைந்தது, 1.50 சதவீதம் குறைக்க வேண்டும்.தமிழகத்திற்கு மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தின் கீழ், மின் கட்டமைப்பு நவீன மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள, 3,200 கோடி ரூபாய் நிதி உதவிக்கு, ஒப்புதல் வழங்க வேண்டும். சட்டீஸ்கர் ராய்கட் - கரூர் புகளூர் - திருச்சூர் உயர் மின் வழித்தடத்தை, தேசிய திட்டமாக அறிவித்து, அதன்படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கடன் எவ்வளவு
புதிய மின் நிலையம் உள்ளிட்ட மின் திட்டங்களுக்கு, ரூரல் எலக்ட்ரிபிகேஷன் நிறுவனத்திடம் இருந்து, 42,000 கோடி ரூபாயும்; பவர் பைனான்ஸ் நிறுவனத்திடம், 38,000 கோடி ரூபாயும், மின் வாரியம் கடன் வாங்கியுள்ளது. இதற்கு, 9, 10 என, பல்வேறு சதவீதங்களில் வட்டி செலுத்தப்படுகிறது.