| ADDED : ஜூன் 06, 2024 02:47 AM
அவனியாபுரம்:'‛முதல்வர் ஸ்டாலினின் நலத்திட்டங்கள், அணுகுமுறைதான் வெற்றிக்கு காரணம்,'' என காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கிடைத்த வெற்றிக்கு முதல் காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். அவரின் நலத்திட்டம், அணுகுமுறை தான் காரணம். மதங்களை மதிக்கின்ற, மதச்சார்பற்ற அரசு மத்தியில் வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல ஓட்டளித்து வெற்றி பெற செய்திருக்கின்றனர்.தமிழகத்தில் அ.தி.மு.க.,வை விட பா.ஜ., அதிக ஓட்டுகள் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். அ.தி.மு.க., பெரிய கட்சி. அவர்களின் சின்னம் கிராமம் வரை உள்ளது. அவர்களுக்கு தொண்டர்கள் இருக்கின்றனர். அதை எந்த காலத்திலும் குறைத்து மதிப்பிட மாட்டேன். பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது, அவர்களுடைய ஓட்டுகள் என்று சொல்ல முடியாது. சமுதாய ரீதியான அமைப்புகளோடு கூட்டணி வைத்திருந்தனர். அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே வேட்பாளர்களாக இருந்ததால் ஓட்டுகள் கிடைத்தன. அயோத்தியில் மக்கள் வைத்த குட்டு, பா.ஜ.,வுக்கு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.