ஊட்டி: இளையமைப்பாளர் இளையராஜா, 'வேலியன்ட்' என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் 'சிம்பொனி' நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்யும் நிலையில், அவர் தனது இசை பணியை முதன் முதலில் துவக்கிய, தெங்குமரஹாடா கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்குவிப்பால், மேற்கத்திய இசை பயிற்சியில் ஈடுபட்டு, இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார்.இதுவரை, 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த அவருக்கு, ஏற்னகவே மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி கவுரவித்துள்ளது. இதைதொடர்ந்து, 'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை இன்று லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்ய உள்ளார்.உலக அரங்கில் நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயர்ந்துள்ள இளையராஜா, தனது இசை பயணத்தை, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட, தெங்குமரஹாடா என்ற அழகிய கிராமத்தில் துவங்கினார் என்பது தற்போதைய சந்ததியினருக்கு தெரிய வாய்ப்பில்லை.
'குறிஞ்சி' மலையின் அழகிய கிராமம்
நீலகிரி மாவட்டத்தில், மாயாற்றின் நீர் சூழ்ந்த தெங்குமரஹாடா கிராமத்தில், கடந்த, 1976ல், தேவராஜ் -மோகன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட 'அன்னக்கிளி' என்ற திரைப்படத்துக்கு முதன் முதலாக இசை அமைத்து, தனது இசை பயணத்தை இளையராஜா அரங்கேற்றினார். அதில், இடம் பெற்ற, 'அன்னக்கிளி உன்னைத் தேடுவதே', 'மச்சானை பார்த்தீங்களா' என்ற பாடல்கள் இன்று வரை பிரலமாக உள்ளன.கிராமிய மணம், மேற்கத்திய இசை கோர்வையுடன் கலந்த இப்பாடல்கள், அந்த காலத்தில், தமிழ் சினிமா உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துவக்க புள்ளியாக இருந்தன. இளையராஜா 'மேஸ்ட்ரோ' இசையமைக்க உந்து சக்தியாக அமைந்தன. இதன் உச்சமாக தற்போது, 'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் 'சிம்பொனி' நிகழ்ச்சியை இன்று லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்ய உள்ளதால், தெங்குமரஹாடா மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
படபிடிப்பு பூஜையில் பங்கேற்றார்தெங்குமரஹடா கூட்டுறவு பண்ணை சங்க தலைவர் போஜராஜன் கூறியதாவது:சிவக்குமார் - சுஜாதா நடித்த, அன்னக்கிளி படத்தின் 'சூட்டிங்' நடந்தபோது, தெங்குமரஹடா கிராமம் விழா கோலம் பூண்டிருந்ததாக, அப்போது சங்க இயக்குனராக இருந்த எனது தந்தை முத்தையா என்னிடம் கூறியுள்ளார். கிராமத்துக்கு சாலை வசதி இன்றளவும் இல்லை. அந்த காலத்தில், பரிசலில், கேமரா உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று அப்படத்தின் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.அப்போது, இளையராஜா உட்பட அனைவரும் சங்க உறுப்பினர் வீடுகளில் தங்கி, பட பூஜையில் பங்கேற்றனர். அதனால், இளையராஜாவுக்கும் தெங்குமரஹடா கிராமத்துக்கும் நீண்ட காலமாக உணர்வு பூர்வமான தொடர்பு உள்ளது.
அவர் லண்டனில் 'சிம்பொனி' நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்வதில், கூட்டுறவு பண்ணை சங்க உறுப்பினர்கள்; கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெங்குமரஹாடா கிராமத்துக்கு அவரை அழைத்து வந்து பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதும் அங்குள்ள மக்களின் விருப்பம் இவ்வாறு அவர் கூறினார் .