சென்னை : தகவல் தொழில்நுட்ப துறையில், தமிழின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், வரும் 28, 29ம் தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடக்க உள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறையில், தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், வல்லுனர்கள் பங்கேற்கும் ஆராய்ச்சி கருத்தரங்கத்தை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்த உலகத் தமிழ் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை, தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி உள்ளது. வரும் 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ள கருத்தரங்கில், தமிழக இ- - கவர்னன்ஸ், எல்காட், டைடல் பார்க், அண்ணா பல்கலை, எஸ்.டி.பி.ஐ., மற்றும் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, கருத்தரங்க ஏற்பாட்டு குழு தலைவர் செல்வகுமார் கூறுகையில், ''தொழில்நுட்ப துறையில், தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த துறையில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் உள்ளிட்டவற்றின் பங்களிப்பு, அபரிமிதமான வளர்ச்சியை பெறும். அதுகுறித்த கண்டுபிடிப்புகள் மற்றும் கண்காட்சிக்கும், மாணவர்களுக்கான தொழில், வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்றார்.