தமிழக அரசின் மொத்த கடன் ரூ.15 லட்சம் கோடியாக உயரும்: பா.ம.க., பொருளாதார அறிக்கையில் தகவல்
சென்னை : 'தமிழகத்தின் மொத்த கடன், 2025 - -26ம் ஆண்டில், 15.05 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்' என, பா.ம.க., வெளியிட்ட உத்தேச பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 22 ஆண்டுகளாக, நிழல் பட்ஜெட் வெளியிட்டு வரும் பா.ம.க., இந்த ஆண்டு முதல் முறையாக, பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது.அதன் விபரம்:வரும் 2025- - 26ம் நிதியாண்டில், 1,218 கோடி ரூபாய் வருவாய் உபரி எட்டப்படும் என்று, தி.மு.க., அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. வருவாய் பற்றாக்குறை 50,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை, 1.20 லட்சம் கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது.வரும் 2025- - 26ல், தமிழக அரசு வாங்கும் மொத்த கடன் அளவு, 1.65 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். தமிழக அரசு செலுத்தும் வட்டி, 75,௦௦௦ கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும். வரும் 2026 மார்ச் 31ல், தமிழக அரசின் நேரடி கடன், 9.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.தமிழகத்தில உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும், 1.94 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. மின்வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் வாங்கப்பட்ட கடனின் அளவு, 5.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இதனால், தமிழகத்தின் மொத்த கடன், வரும் நிதியாண்டு முடிவில், 15.05 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். வரும் 2030ல், ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர், அதாவது 88 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் சாத்தியமில்லை.முதல்வர் தவிர, மற்றவர்களின் விமான பயணங்களுக்கு தடை, அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்க தடை, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆடம்பர ஹோட்டல்களில் தங்க தடை, தமிழக அரசின் ஆலோசகர்கள் நியமனங்கள் ரத்து போன்ற நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.