உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா பெயர் மாற்ற சொன்னால் மறுக்கும் கம்ப்யூட்டர்

பட்டா பெயர் மாற்ற சொன்னால் மறுக்கும் கம்ப்யூட்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பட்டா விபரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின்படி, வழிகாட்டி மதிப்புகளை மாற்றாததால், பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சார் - பதிவாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்கள் விற்பனை, சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதில், ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் விற்பனை செய்யப்பட்டால், அதற்கான பட்டாவில் உடனடி பெயர் மாற்றம் செய்யப்படும். பழைய உரிமையாளர், புதிய உரிமையாளர் குறித்த விபரங்களை, சார் - பதிவாளர் உறுதி செய்தால் போதும். இதன் அடிப்படையில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்யப்படும். தமிழகத்தில், அனைத்து தாலுகாக்களிலும் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, இத்திட்டம் விரிவு செய்யப்பட உள்ளது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட சர்வே எண், ஒன்றுக்கு மேல் பிரிக்கப்பட்டால், அதுகுறித்த விபரங்களை பதிவுத்துறைக்கு, வருவாய்த் துறை அனுப்புவதில்லை. இதனால், பத்திரப்பதிவின்போது, தமிழ் நிலம் தொகுப்பில் உள்ள விபரங்களுக்கும், பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு தகவல் தொகுப்பும் வேறுபட்டு காணப்படுகிறது. இதனால், பத்திரப் பதிவு செய்யும்போது, 'தமிழ் நிலம்' தொகுப்பில் உள்ள விபரங்கள் அடிப்படையில், பட்டா மாறுதலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில், பத்திரத்தில் உள்ள தகவலுக்கு மாறான விபரங்கள் இருப்பதால், கம்ப்யூட்டரில் பட்டா மாறுதல் செய்ய முடிவதில்லை.மாதம் ஒரு முறை என்ற அடிப்படையில், சர்வே எண்கள், உட்பிரிவு மாற்றங்கள் குறித்த விபரங்களை, வருவாய்த் துறை அதிகாரிகள், பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். இதன் அடிப்படையில், பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு தகவல் தொகுப்பை மேம்படுத்த வேண்டும். இந்த பணிகள் முறையாக நடந்தால், எவ்வித சிக்கலும் இன்றி, பட்டாவில் உடனடியாக பெயர் மாற்ற முடியும். வருவாய்த் துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram
செப் 07, 2024 19:51

வருவாய் துறையினருக்கு வருவாய் போய்விடும். எனவே அவர்கள் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள். இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.


குலோத்துங்கன்
செப் 07, 2024 09:48

அடிக்கிற காசில் கம்பியூட்டருக்கும் ஒரு கட்டிங் குடுத்துப் பாருங்க.


அப்பாவி
செப் 07, 2024 09:46

ஹையா... அங்கே நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி கம்பியூட்டருக்குக் கூட தெரிஞ்சு போச்சு.


முக்கிய வீடியோ