சென்னை: 'விவசாயிகளை பழிவாங்கும் தி.மு.க., அரசு வீழ்த்தப்படும் நாள், வெகு தொலைவில் இல்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், அ.தி.மு.க., ஆட்சி நடந்தாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் என்பது மட்டும், தீராத வியாதியாக தொடர்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், படாளம், பழையனுார் கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூடைகளை விற்கச் செல்லும் விவசாயிகளிடம் மூடைக்கு, 60 ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதைத் தட்டிக் கேட்ட விவசாய சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது.விவசாயிகளின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., நன்றி மறந்து விவசாயிகள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.கொலை, கொள்ளை, போதை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி விவசாயிகளையும், கிளி ஜோதிடர்களையும், சாலையில், 'ஆம்லேட்' போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்கிறது.ஒட்டு மொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான விவசாயிகளை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. தமிழகத்தில் விவசாயிகளை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் தி.மு.க., அரசு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.