இணைகளை தேடிச் சென்ற படையப்பா: மாயமானதால் வனத்துறை அதிர்ச்சி
மூணாறு : மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித்திரிந்த படையப்பா யானை இணைகளை தேடிச் சென்ற நிலையில் மாயமானதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக மதம் பிடித்த அறிகுறியுடன் ஆவேசமாக சுற்றித் திரிகின்றது.அதனால் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள், சில கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. குறிப்பாக படையப்பா தனிமையில் சுற்றித் திரியும் சுபாவம் கொண்டது. அதே சமயம் மதம் பிடிக்கும்போது இணைகளுடன் சேருவதுண்டு. இந்நிலையில் மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் பகுதியில் குட்டிகளுடன் ஆறு பெண் யானைகளை கொண்ட கூட்டம் கடந்த மூன்று நாட்களாக முகாமிட்டன. அந்த கூட்டத்துடன் படையப்பா இணைந்து இரண்டு நாட்களாக சுற்றித்திரிந்தது. அதனை வனத்துறை அதிரடிபடையினர் கண்காணித்து வந்த நிலையில் நேற்று காலை கூட்டத்துடன் படையப்பா மாயமானது. அதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் படையப்பாவை காணவில்லை எனவும், அதனை குறித்து அறிந்தால் தகவல் அளிக்குமாறும் அனைவருக்கும் அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பினர். இதனிடையே கூடாரவிளை எஸ்டேட்டில் வேறு பகுதியில் படையப்பாவை கண்டு பிடித்ததால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.