சென்னை,: தமிழகத்தில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது என, அரசு புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப, சாலை விரிவாக்கம் இல்லாததால், நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 10 முதல் 14 சதவீதம் வரை வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல்
அரசு போக்குவரத்து துறை பதிவேடுகளின்படி, கடந்த மார்ச் வரை தமிழகத்தில் மொத்தம், 3 கோடியே 56 லட்சத்து 28,925 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அரசு, தனியார் பஸ், ஆட்டோக்கள், கல்லுாரி, பள்ளி வாகனங்கள் மற்றும் பல வகையான லாரிகள் எண்ணிக்கை, 13 லட்சத்து 98,081. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 3 கோடியே 90,744. இது, மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 86 சதவீதம்.அதேநேரத்தில், 2011ல் ஒரு கோடியே 12 லட்சத்து 7,338 இருசக்கர வாகனங்கள் தான் பதிவு செய்யப்பட்டிருந்தன.வாகனங்களின் பெருக்கத்துக்கு ஏற்ப, சாலை விரிவாக்க வசதி இல்லை. இதனால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்குவது மட்டுமின்றி, மோசமான சாலைகளால் விபத்துகளிலும் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சில ஆண்டுகளாக, சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை, 7 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. பொது போக்குவரத்து
பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, சாலைகளை விரிவுபடுத்துதல், முக்கியமான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுவதால், இதன் பலன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில், சொந்த வாகனங்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்த அதிகளவில் முதலீடு செய்து, பஸ், மெட்ரோ, புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு தரமான பொது போக்குவரத்து வசதி கிடைக்கும்போது, சொந்த வாகனங்களின் பயன்பாடு என்பது படிப்படியாக குறையும்.புதிய தொழிற்சாலைகள் திறப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், சென்னை போன்ற பெரிய நகரங்களில் வாகனப் பெருக்கம் தவிர்க்க முடியாதது. ஆனாலும், சில கட்டுப்பாடுகள் வாயிலாக, தனியார் வாகன பெருக்கத்தை குறைக்கலாம்.அதுபோல, பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்திட வேண்டும். பஸ்கள் செல்ல தனி சாலை போன்றவற்றை செயல்படுத்தலாம். மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாக முடிப்பதோடு, நல்ல இணைப்பு வசதியை அளிக்க வேண்டும். சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், பஸ், ரயில் நிலையங்களை இணைத்து கட்டுமான பணி நடந்து வருவதால், நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டமிடல் குறித்து தற்போதே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாக்ஸ்
வாகனங்கள் எண்ணிக்கைஆண்டு மொத்த வாகனங்கள் இருசக்கர வாகனங்கள்2019 - 20 - 2,95,09,863 - 2,49,18,3842020 - 21 - 3,09,44,816 - 2,61,45,1132021 - 22 - 3,23,44,365 - 2,72,94,4382022 - 23 - 3,39,72,067 - 2,86,43,2342023 - 24 - 3,57,53,024 - 3,00,90,744***