கள்ளக்குறிச்சி கள்ளச்சார ய பலி சம்பவம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து தஞ்சாவூரில் மாவட்ட பா.ஜ., தலைவர் ஜெய்சதீஸ் தலைமையிலான பா.ஜ.,வினர், பழைய ராமேஸ்வரம் சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கீழவாசல் காமராஜர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்l மதுரையில் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அந்த பகுதியில் கூடியவர்களை நிற்கவிடாமல் போலீசார் வேனில் ஏற்றினர். மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முயன்ற போது போலீசார் அனுமதி மறுத்தனர். மொத்தம் 110 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மூன்றுமாவடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 90 பேர் கைது செய்யப்பட்டனர்l திருவள்ளூர் டோல்கேட் அருகில் மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 17 பெண்கள் உட்பட, 145 பேர் கைதாகினர். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்களையும், போலீசார் விரட்டி, பிடித்து பேருந்தில் ஏற்றினர். இதற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு, பேருந்தில் இருந்து இறங்கி சென்றனர். அப்பகுதியில் டீ குடித்த மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களையும், போலீசார் கைது செய்தது 'கேலி'கூத்தாக அரங்கேறியதுl புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் நுாற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சேலம் ஒருங்கிணைந்த பா.ஜ., சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அனைவரும் கைது செய்யப்படுவர் என, போலீசார் அறிவித்தனர். அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால், பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜ.,வினர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 16 பெண்கள் உள்பட, 198 பேரை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.l நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்த பா.ஜ.,வினர், 80 பேர் கைது செய்யப்பட்டனர்.-- நமது நிருபர் -