வேங்கைவயல் வழக்கில் மூவர் முதல்முறையாக கோர்ட்டில் ஆஜர்
புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேர், விசாரணைக்காக முதல் முறையாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதில், அதே ஊரைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது.மார்ச் 11 அன்று மூவரும் ஆஜராக, நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. விசாரணைக்காக, நேற்று குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆஜராகினர்.மேலும், ஜாமின் வழங்க கோரியும், குற்றப்பத்திரிகை நகல் வழங்க கோரியும் மனு தாக்கல் செய்தனர். பொறுப்பு நீதிபதி பூர்ணிமா முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் சார்பில், பிணைய உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது.அதை ஏற்று, மூவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. மேலும், வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.