| ADDED : மே 21, 2024 04:43 AM
ஊட்டி : ''பழங்குடியினர் மத மாற்றம், நீலகிரி மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது,'' என, ஹிந்து முன்னணி மாநில பொது செயலர் தெரிவித்தார்.ஊட்டியில், ஹிந்து முன்னணி மாநில பொது செயலர் கிேஷார் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரை மத மாற்றம் செய்வதாக, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. பொய்யான பிரசாரத்தின் மூலம் மூளை சலவை செய்து, மத மாற்றம் செய்துள்ளனர். இம்மாவட்டத்தை கிறிஸ்துவ மாவட்டமாக மாற்றுவதற்காக சிலர் முயற்சி செய்கின்றனர். மதமாற்றத்தால் பழங்குடியினரின் பாரம்பரிய, கலாசாரம் கேள்விக்குறியாவதால், இதை தடுக்க வேண்டும் என அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்; ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நிறைய இடங்களில் அனுமதியில்லாமல் ஜெபக்கூடங்கள் நடத்த அனுமதி கொடுத்துள்ளனர்.பழங்குடியினர் மத மாற்றம் நீலகிரி மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஹிந்து முன்னணி போராட்டம் நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.