உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேட்பு மனுவில் தவறான தகவல் தந்தவர் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டருக்கு சிக்கல்

வேட்பு மனுவில் தவறான தகவல் தந்தவர் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டருக்கு சிக்கல்

சென்னை: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி வார்டில், 2019ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பாப்பா சுப்பிரமணியன் என்பவர் வெற்றி பெற்றார். இதன்பின், 2022ம் ஆண்டு அக்., 29ல், குடவாசல் பகுதியை சேர்ந்த சரத்பாபு, மாநில தேர்தல் ஆணையத்தில், பாப்பா சுப்பிரமணியனுக்கு எதிராக புகார் மனு அளித்தார்.அதில், 'வேட்பு மனுவில் பாப்பா சுப்பிரமணியன், சொத்து விபரங்களை முழுமையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளார். எனவே, தமிழக பஞ்சாயத்து தேர்தல் விதிகளின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாப்பா சுப்பிரமணியனுக்கு எதிராக சரத்பாபு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேட்பு மனுவில் தகவல்களை மறைத்தது தொடர்பாக, பாப்பா சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரின் பதவி காலத்தை நிறைவு செய்ய அனுமதித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி, திருவாரூர் மாவட்ட கலெக்டர், மாநில தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட கலெக்டர், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாநில தேர்தல் ஆணைய மனுவில், 'தேர்தல் நடைமுறைகள் முடிந்து விட்டால், புகார்கள் குறித்து விசாரணை நடத்த, மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தகுதி நீக்கம் செய்யவும் முடியாது' என, தெரிவிக்கப்பட்டது.மாவட்ட கலெக்டர் தரப்பு மனுவில், 'சட்டப்படி, தற்போது பாப்பா சுப்பிரமணியனுக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி தனிநபர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்' என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:வேட்பு மனுவில் தகவல்களை மறைத்தவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாவிட்டால், எதற்காக தகவல்கள் கேட்கப்படுகின்றன. தவறான தகவலை மறைத்த ஒருவரை, ஐந்து ஆண்டுகள் முழுதும் பதவியில் தொடர அனுமதித்தது, அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுகிறது. அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளனர். அரசியல்வாதிகள் மீது தொடரப்படும் வழக்குகள், எந்தவொரு முடிவையும் எட்டுவதில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இதே நிலை தொடர்கிறது. இதற்கு, அதிகாரிகளும் துணை போகின்றனர். எனவே, வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்காமல், காலதாமதம் செய்த திருவாரூர் மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு எதிராக, தலைமை செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

seshadri
மார் 01, 2025 03:01

நீதிமன்றமே உத்தரவு போட்டாச்சு. அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து விட வேண்டியதுதான். நடவடிக்கை எடுத்திருந்தால் எங்கள் உயிருக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் எஜமான். இப்போதெல்லாம் நீதி மன்ற உத்தரவை யாரும் மதிப்பதில்லை. அவர்களும் வருகிற வழக்கிற்கு முடிவு எழுத வேண்டுமில்லையா நீங்கள் பாட்டுக்கு உத்தரவு கொடுங்கள் அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையை பார்த்துக்கொள்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை