நாடு முழுதும் 70 சிட்பி வங்கிகள் துவக்க திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை:''எம்.எஸ்.எம்.இ.,க்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும், 70 சிட்பி எனும், சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு புதிய கிளைகள் துவக்கப்படவுள்ளன. ஜி.எஸ்.டி., சார்ந்த பிரச்னைகள் குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலில் பேசி முடிவு காணப்படும்,'' என, கோவையில் நடந்த தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்வில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். கோவை கொடிசியா வர்த்தக அரங்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில் துறை அமைப்புகளுடன் கூட்டம், நேற்று மாலை நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், அவர் பேசியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசின், பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் கோவையில் தங்கி, தொழில் துறையினரின் குறைகளை கேட்டறிந்துள்ளனர். கோரிக்கைகளின் தன்மை பொறுத்து, உடனடியாகவும், படிப்படியாகவும் தீர்வு காணப்படும். ஜி.எஸ்.டி., குறித்த கோரிக்கைகள் ஜி.எஸ்.டி., கவுன்சிலில் எடுத்துரைக்கப்படும். எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில், 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம். இதன் வாயிலாக, 40,000 புகார்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின், 163 எம்.எஸ்.எம்.இ., கிளஸ்டர்களில் 63 இடங்களில் மட்டுமே சிட்பி உள்ளது. தற்போது, மேலும் 70 இடங்களில் சிட்பி வங்கி எனும் சிறுதொழில் வளர்ச்சி வங்கிகளின் கிளைகளை துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அதில் ஒன்று, கோவையில் துவங்கப்படவுள்ளது. குறு நிறுவனங்கள், சிட்பி வங்கியை அணுகி கடன் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். கடந்த மத்திய பட்ஜெட்டில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். நாட்டின் 100 பெரிய நகரங்களில், 'பிளக் அண்டு பிளே' முறையில் தொழில் பூங்கா அமைப்பது குறித்து பட்ஜெட்டில் தெரிவித்துள்ளோம். முத்ரா கடன்
முத்ரா திட்டத்தில் நாட்டில், 49.5 கோடி ரூபாய் வங்கி கடன் கணக்கு உள்ளது. இதில், தமிழகத்தில் 5.6 கோடி கணக்கும், கோவையில் மட்டும் 20 லட்சம் கணக்கும் உள்ளன. நாடு முழுவதும், விஷ்வ கர்மா திட்டத்தில், 2 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன. 13.15 லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாடு இத்திட்டத்தில் செயல்பாடுகள் துவக்கவில்லை; இதில் மத்திய அரசை குறை சொல்ல இயலாது. மத்திய அரசின் வாயிலாக, விருதுநகர் உட்பட நாட்டின் ஏழு இடங்களில், மித்ரா பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தற்போது, 6000 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 2028 க்குள் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் இங்கு இருந்து மட்டும் கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்களை, தொழில்நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
பங்கேற்றது யார் யார்?
இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசன், மத்திய எம்.எஸ்.எம்.இ., அமைச்சகத்தின் கூடுதல் மேம்பாட்டு கமிஷனர் இஷிதா கங்குலி திரிபாதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி முதன்மை தலைமை கமிஷனர் ஆஷிஷ் வர்மா, சென்னை கலால் வரித்துறை தலைமை கமிஷனர் ராம்நிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
என்ன செய்கிறது; பதில் இதோ!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''உதயம் பதிவுகளில், 4.79 கோடி பதிவு செய்த எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உள்ளது. தமிழகத்தில், 29 லட்சம் பேர் உதயம் போர்டலில் பதிவு செய்து உள்ளனர். ''பி.எம்.இ.ஜி.பி., திட்டத்தில், 2023 - 24 ஆண்டில் 22,050 தொழில் திட்டங்களுக்கு உதவி வழங்கி, ரூ.900 கோடி இதன் வாயிலாக நிதி வழங்கியுள்ளோம்.''இதனால், 1.76 லட்சம் பேர் புதிய சுயதொழில் முனைவோராக மாறியுள்ளனர். தமிழகத்தில், 1,551 தொழில் திட்டங்களுக்கு 54.68 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 12,408 பேர், பி.எம்.இ.ஜி.பி., திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்கிறது என்று, தொடர்ந்து கேட்பவர்களுக்காகவே, இதை கூறுகிறேன்,'' என்றார்.