உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறை தரிசனம்!:சிறுகதை

இறை தரிசனம்!:சிறுகதை

அது ஒரு வெள்ளிக்கிழமை. ஷுர் எனும் எக்காளம் ஊதப்பட்டது. வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கடல்கள், மலைகள் துாள்துாளாகி விசிறியடிக்கப்பட்டன. பிரபஞ்ச உயிர்கள் அனைத்தும் அழிந்தொழிந்தன. நாற்பது நிமிட கரைசலில் மீண்டும் எக்காளம் ஊதப்பட்டது. நொறுங்கிய வானத்திலிருந்து பிரளய வேகமாய் தண்ணீர் கொட்டியது.மண்ணோடு மண்ணாய் மக்கிப் போயிருந்த மனிதர்கள் நிர்வாணிகளாய் விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாய் எழுந்தனர்.மஹ்ஸர் மைதானத்தில் மனிதர்கள் திரட்டப்பட்டனர்.அர்ஷ் மீது இறைவன் வீற்றிருந்தான். அவன்முன் எழுபதாயிரம் திரைகள். இறைவனுக்கு மிக அருகில் நபிகள் நாயகம் நின்றிருந்தார். அவர் பச்சைநிற நெஞ்சுபட்டை உள்ள நீளமான சட்டை அணிந்திருந்தார். கைலி போன்ற கீழாடை. தலைப்பாகை. முன்னும்பின்னும் பார்க்கும் தீர்க்கதரிசி கண்கள். வெண்ணிற தாடி. அழகிய பல்வரிசை கொண்ட வாய்.மறுமைநாள் வரிசையில் பத்து வயது சிறுமி ரும்மானா நின்றிருந்தாள். அவள் ஆசைதீர நபிகள் நாயகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.“இங்கு ஸலாம் சொல்லுவது முறையா என்று எனக்கு தெரியவில்லை. அஸ்ஸலாமு அலைக்கும் உம்மி நபி!”“வஅலைக்கும் ஸலாம் சிறுமியே!”ரும்மானாவின் பெயர் பெற்றோர் பெயர் வாழ்ந்த இடம் சரிபார்க்கப்பட்டன.“ரும்மானா! நான்கு வயதிலிருந்து தொழுதிருக்கிறாய். தினந்தோறும் குர்ஆன் ஓதியிருக்கிறாய். பத்தாவது வயதில் பாம்பு கடித்து மரணமடைந்திருக்கிறாய்... உனக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கம் பரிசளித்திருக்கிறேன்... வலப்பக்கம் போ!““என்னுடைய பெற்றோருக்கு என்ன கிடைத்தது?”“உன் தாய், தன் மாமனார் மாமியாருக்கு உணவு தராமல் பட்டினி போட்டுக் கொன்றார். மனைவியின் தகாத செயலை கண்டிக்காது பெற்றோரின் அவல மரணத்திற்கு காரணமாய் இருந்தார் உன் தந்தை. அதனால் இருவருக்கும் கொடும் நரகம்!”“என்னுடைய சொர்க்கத்தை என் பெற்றோருக்கு கொடுத்து விடக் கூடாதா? நான் நரகத்தில் இருந்து கொள்கிறேன்.”“மறுமை நாளில் பண்டமாற்று இல்லை!”“சொர்க்கம் இஸ்லாமியருக்கு மட்டும் தானா?”“இல்லை. மதம், இனம், நிறம், மொழி, பணம், பதவி, அதிகாரம் இவற்றுக்கு அப்பாற்பட்டு நல்லது நாடியவர்களுக்கு சொர்க்கம்; கெட்டது நாடியவர்களுக்கு நரகம்!”ஒரு கழுதையில் ஏறி ரும்மானா சிராத்துல் முஸ்தகீன் பாலத்தைக் கடந்தாள். பாலத்தைக் கடக்கும் போது ஏராளமானோர் சறுக்கி இடறி ஸகர், ஹாலியா. அல்ஹுதமா, ஜஹன்னம், ஸஈர் வழா, அந்நார், ஜஹும் நரகங்களில் புகுந்தனர்.சொர்க்கவாசிகள் தாருஸ் ஸலாம். ஜன்னத்துல் ஹுல்த், தாருல், முகாமஹ், ஜன்னத்துல் மவா, ஜன்னத்து அத்ன், ஜன்னதுன நஈம், மகாமுன் அமீன், மக்அது ஸிர்க் சொர்க்கங்களில் பிரவேசித்தனர்.ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்துக்குள் பரவசமாக புகுந்தோடினாள் ரும்மானா. உள்ளே நுழைந்த ரும்மானாவுக்கு பெரிய மீனின் ஈரலும் ரஹிகிம் மஹ்துாம் போதை இல்லாத மதுவும் வழங்கப்பட்டன.சிலர் காளைமாட்டு மாமிசம் உண்டு, இஞ்சி கலந்த பானம் குடித்தனர். ஸல்ஸமின் நீருற்று பொங்கி வழிந்தது.சொர்க்கம் முழுக்க நறுமணம் கமழ்ந்தது. தரைமணல் குங்குமப்பூவாய் பரவிக் கிடந்தது. முத்துகளும் மரகதக்கற்களும் கொட்டிக்கிடந்தன. சொர்க்க மாளிகைகள் கண்ணாடி மாளிகைகளாய் ஜாஜ்வல்யம் காட்டின. இரு மாளிகைகளுக்கு ஊடே கௌதர் நதி போன்று ஆறுக்கும் மேற்பட்ட நதிகள் ஓடின. அந்திநேர சீதோஷ்ண நிலை.சொர்க்கம் புகுந்த ஆண்களை ஹுருல்ஈன் அழகிகள் சூழ்ந்து கொண்டனர்.நற்செயல்கள் புரிந்த கணவன், மனைவி சொர்க்கத்தில் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர். தாம்பத்யம் உண்டு. குழந்தைகள் பிறக்காது.சொர்க்கத்தின் மலக் மாலிக், ரும்மானாவை ஆதரவாய் அணைத்து வினவியது. “சொர்க்கத்தில் தொழுகையும், குர்ஆன் வாசிப்பும் கட்டாயம் இல்லை. நீயோ இரண்டும் செய்கிறாய்?”“நான் தொழுதது குர்ஆன் ஓதியது சொர்க்கம் பெற அல்ல-; நபிகள் நாயகத்தையும் இறைவனையும் தரிசிக்க விரும்பினேன்!”“நபிகள் நாயகத்தை தரிசித்து விட்டாயே...”“இன்னும் இறைவனை தரிசிக்கவில்லையே...”“இறைவனை தரிசிப்பது சாதாரண விஷயமா? மூஸா நபிகள் இறைவனை தரிசிக்க முயன்று மலையை தவிடுபொடியாக்கிய பேரொளியில் மூர்ச்சையானாரே... அது உனக்கு தெரியாதா?”“தெரியும். உயரிய சொர்க்கத்திற்குள் புகுந்த ஒரு சொர்க்கவாசியின் ஆசையை இறைவன் நிறைவேற்றித் தர மாட்டானா?”“லட்சக்கணக்கான சொர்க்கவாசிகளுக்கு கிடைக்காத வாய்ப்பு உனக்கெப்படி கிடைக்கும்?”“ஒரு சிறுமியின் பேராவலை நிறைவேற்றித் தரமாட்டானா இறைவன்?”“விசுவாசிகளின் படித்தரத்தை இறைவன் ஒருவனே அறிவான். அவன் யாரை அதிகம் நேசிக்கிறான் யாரை குறைவாக நேசிக்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மிராஜ் இரவில் நபிகள் நாயகத்துக்கு இறைவனை தரிசித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிகளுக்கு கிடைக்கவில்லையே?”“ரும்மானா இறைவனுக்கு மிகவும் பிடித்த சிறுமி!”“இறைவனை யாராக பாவிக்கிறாய்?”“என்னுடைய தாயாக பாவிக்கிறேன். என் தாயின் இடுப்பில் அமர வேண்டும். தாயின் புடவை வாசனையை நுகர வேண்டும்.”ரும்மானாவின் முன் இறக்கைகளை அசைத்தது மலக். “இறைவனை நேரில் தரிசிக்கும் வாய்ப்புக்கு 'லிக்காஉல்லாஹ்' என்பர். அந்த லிக்கா உனக்கு உள்ளதா என ஆராயவேண்டும்!”“நான் லிக்காஉல்லாஹ் உள்ள சிறுமி!”“படைத்தவனுக்கும், படைப்புகளுக்கும் இடையே எழுபதாயிரம் திரைகள் உள்ளன சிறுமியே...”“அத்தனை திரைகளையும் விலக்கி இறைவனை தரிசிப்பேன்...”“வானவர் தலைவர் ஜிப்ரயீல் அலைவஸலாம் மூலம் உன் விருப்பத்தை இறைவனிடம் கொண்டு செல்கிறேன்!”மலக் பறந்து மறைந்தது.சொர்க்க மக்களுக்கு ஆடை நெய்ய பயன்படும் துாபாமரம் பிரமாண்டமாய் குடை விரித்திருந்தது. ஆன்ம வேகத்தில் அனைத்து பிரபஞ்சங்களையும் ஊடுருவி பயணித்து இறைவனின் முன் வந்து நின்றாள் ரும்மானா.அவளுக்கு எதிரே எழுபதாயிரம் திரைகள் தோன்றின. ஒளிவேகத்தில் ஒவ்வொரு திரையாய் அகன்றது.விஷ்க் விஷ்க். உய்க் உய்க்.கடைசி திரை விலகியதும் இறைவன் பேரொளியாய் விஸ்வரூபித்தான். ரும்மானா இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விரல்கள் இடைவெளியில் இறைவனை பார்த்தாள்.“அஸ்ஸலாமு அலைக்கும் இறைவனே!”“வஅலைக்கும் ஸலாம் ரும்மானா!”“அரபியில் உரையாடப் போகிறீர்களா இறைவனே!”“ஆம்!”“தமிழில் உரையாடுங்கள்!”“சரி!”இறைவனை முழுமையாக பார்த்தாள் ரும்மானா. மனித ஆண், மனித பெண் மிருகங்கள் பறவைகள், மீன்கள் சாயல்கள் க்ளைடாஸ்கோப்பி இறைவனின் முகமாய் உருண்டு திரண்டிருந்தது. இறைவனின் குரலில் உலகின் அனைத்து இனிமையான வாத்தியக் கருவிகளின் இசைப்பு தொனித்தது. லட்சவர்ண கிளைப்புகள் சீறிப் பாய்ந்தன. இறைவனிடமிருந்து மகா அற்புதமான நறுமணம் வீசியது. “என்னை தேடினாயா ரும்மானா?” ரும்மானாவின் அம்மாவின் குரல். “ஆமாம்!”“என் இடுப்பில் வந்து அமர்ந்து கொள்!”தாவி அமர்ந்து கொண்டாள் ரும்மானா.“உன் தாயிடம் தாய்ப்பால் குடித்திருக்கிறாயா ரும்மானா?”“எனது தாய் எனக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட்டாள்!”“தாய்ப்பால் குடிக்க விரும்புகிறாயா?”“தாய்ப்பால் கொடுக்க எனக்கு அன்பான தாய் இல்லையே?”“ஏன் நானிருக்கிறேனே...?”தாய்மை பூத்தான் இறைவன். மார்பகங்கள் கனத்தன. வயிறு முட்ட முட்ட ரும்மானா தாய்ப்பால் குடித்தாள். “போதுமா ரும்மானா?”“முன்னுாறு வருட என் பசி போய்விட்டது இறைவனே!”“கவலைப்படாதே... ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உனக்கு நான் தாய்ப்பால் புகட்டுகிறேன்...”இறைவன் பேரொளியாய் மாறி அர்ஷ் அரியாசனத்தில் போய் அமர்ந்தான். “நான் உருவாக்கிய மனித உணர்வுகளில் உன்னதமானது தாய்மை. அந்த தாய்மையை ரும்மானாவுக்கு பால் புகட்டியதன் மூலம் ஒரு நானோ நொடி நானே உணர்ந்தேன்!”ஆதிதாயாக இறைவன் பரவசித்தான்.ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி